உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

117

நகரமாகிவிடாது. அங்ஙனமே வீணையெனப் படும் செங்கோட்டியாழும்

என்க.

இரண்டாம் நூற்றாண்டினதான சிலப்பதிகாரத்தில் "நாரதன் வீணை நயந்தெரி பாடலும்” என்றும், 7-ஆம் நூற்றாண்டினதான அப்பர் தேவாரத்தில் “மாசில் வீணையும்” என்றும், வருதலால், வீணை11-ஆம் நூற்றாண்டில் தோன்றியதென்பது பொருந்தாது. வேதகால நாரதர் தமிழ்நாடு வந்தே இசைகற்றுப் பஞ்சபார தீயம் என்னும் இசைத் தமிழ் நூலை இயற்றினார். பத்தாம் நூற்றாண்டினதான சீவகசிந்தாமணிக் காந்தருவதத்தையிலம்பகத்தில், யாழென்றும் வீணையென்றும் ஒரே கருவி குறிக்கப்படுவதால், யாழ் வேறு வீணை வேறு அல்ல. இக்காலத்தில் சுரையாழும் வீணையென்றே பெயர் பெற்றிருத்தல் காண்க.

திருஞான சம்பந்தர் பாடிய யாழ்முரிப் பண்ணின் இயல்பு இன்று எவருக்கும் தெரியாமையால், யாழ்முரி வீணைக்கமையும் என்பதும் பொருந்தாது.

தாளக் கருவி வெண்கலத்தினாற் செய்யப்ட்டதினால், அது வெண்கலக் கருவியெனப்பட்டது. சல் அல்லது சல்லரை என்னும் ஓசையுடைமையால் தாளக் கருவியிற் பெரியது சல்லரியென்னும் சிறியது சாலர் என்றும் பெயர் பெற்றன.

குரல் என்பது ‘ம' என்னும் 5-ஆம் இசையென்றும், ஒரு நரம்பில் ஒரேயிசை யெழூஉம் நரப்புக் கருவியே தமிழரது என்றும், கூறுவார் தமிழராயினும் இசைத் தமிழ் அடிப்படையே அறியாதார் ஆவர். "குரல் முதலேழும்” என்று இளங்கோவடிகளும் (சிலப்.5: 35), "முதற்றான மாகிய குரலிலே” என்று புறநானூற்று உரையாசிரியரும் (புறம். 11), "மூவேழ் துறையும் முறையுளிக் கழிப்பி" என்று வன்பரணரும் (புறம்.152), கூறியிருத்தலையும், அவர் கவனித்திலர்.

குரல் என்னும் சொல்லே, இயல்பான குரலாகிய முதலிசையையே குறிக்கும். சுரையாழும் பெருங்கலமுமே வில்யாழ் (Harp)போல் மெட்டின்றி ஓரிசைக் கொரு நரம்பு கொண்டவை. பேயாழ் முதலிய பிறயாழெல்லாம் மெட்டுக்களோடுகூடி, ஒரே நரம்பில் பலவிசையிசைக் கக்கூடிய பண்மொழி நரம்புகள் கொண்டனவாகவே தெரிகின்றன.

பண்களை, ஏழிசையுமுள்ளவை பண் என்றும், ஆறிசை யுள்ளவை பண்ணியல் என்றும், ஐயிசையுள்ளவை திறம் என்றும், நாலிசையுள்ளவை திறத்திறம் என்றும், நால்வகையாக வகுத்திருந்தனர். இந்நால்வகைப் பண்களும் மொத்தம் 11,991 எனக் கணிக்கப் பட்டிருந்தன.