உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

"இசையாவது, நரப்படைவால் உரைக்கப்பட்ட பதினோரா யிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்றாகிய ஆதியிசைகளும்; அவை யாவன: "உயிருயிர்...கடனே” என்னுஞ் சூத்திரத்தான் உறழ்ந்து கண்டு கொள்க” என்று சிலப்பதிகார அருஞ்சொல்லுரைகாரர் (பக்.64) கூறியிருத்தல் காண்க. பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி என்பன நாற்பெரும் பண்கள். இவற்றுள் ஒவ்வொன்றும் பல திறங்களாகவும் ஒவ்வொரு திறமும் பலவகைகளாகவும் பகுக்கப்பட்டிருந்தன.

ஏழிசையும் சேர்ந்த ஒரு வரிசை அல்லது கோவை நிலை யெனப் படும். சிறந்த பாடகரின் தொண்டையில் கீழும் இடையும் மேலுமாக முந்நிலையிருப்பதால், அவற்றிற்கேற்ப நால்வகைச் சிறப்பியாழும் நரம்பும் மெட்டும் அமைக்கப் பெற்றன. முந்நிலையும், முறையே மெலிவு, சமன், வலிவு எனப் பெயர் பெற்றன. நால்வகை யாழிலும் மெட்டுத் தொகை வேறுபட்டிருந்ததாகத் தெரிகின்றது.

பண்மொழி நரம்பு ஏழும் ஒற்று நரம்பு மூன்றும் ஆர்ப்பு நரம்பு பதினொன்றுமாக, 21 நரம்புகள் பேரியாழிலும்; பண்மொழி நரம்பு இரண்டு குறைந்து 19 நரம்புகள் மகரயாழிலும்; ஆர்ப்பு நரம்பு ஐந்துகுறைந்து 14 நரம்புகள் சகோடயாழிலும்; ஆர்ப்பு நரம்பு அடியோடு இல்லாதும் பண்மொழி யிரண்டு குறைந்தும் இற்றை வீணையிற்போல் 7 நரம்புகள் செங்கோட்டி யாழிலும்; இருந்ததாகக் கருதலாம். ஒன்பது நரம்புள்ள முண்டகயாழ் 4 பண்மொழி நரம்பும் 3 ஒற்று நரம்பும் 2 ஆர்ப்பு நரம்பும் கொண்டது போலும்!

தரப்புச் சித்தார் என்னும் முகமதியர் நரப்பிசைக் கருவியில், இன்றும் 11 ஆர்ப்பு நரம்புகள் கட்டப்பெறுதல் காண்க. அவற்றினால் உண்டாகும் அதிர்வு இசையினிமையைக் கெடுத்ததினால், அவற்றை வரவரக் குறைத்து வந்து இறுதியில் அடியோடு நீக்கிவிட்டனர். இசையின்ப வுணர்ச்சி பெருகப் பெருக, யாழ்கள் திருந்தி வந்திருக்கின்றன. வரவரத் திருந்துதலே யன்றித் திருந்தாமை இயற்கையன்று. அநாகரிக மாந்தர் இசைக் கருவிகளின் மிகுதியையும், நாகரிக மக்கள் அவற்றின் இனிமை மிகுதியையும், இன்றும் விரும்புதல் இயல்பாயிருத்தல் காண்க.

.

ஓசை

யாழ்ப்பத்தரின் மூடியாகிய போர்வை, முன்பு தோலாயிருந்து பின்பு பாதுகாப்பிற்காக மரமாக மாற்றப் பெற்றது. யாழின் அமைப்பை அறிய விரும்புவார், தஞ்சை ஆபிராகாம் பண்டித மகனார் வரகுண பாண்டியனார் ஆராய்ந்தெழுதிய ‘பாணர் கைவழி' என்னும் நூலைப் பார்க்க. ஆரட்டிரு விபுலானந்த அடிகளின் யாழ் நூல் அடிப்படையில் தவறியதால் முதற் கோணல் முற்றுங்கோணலாய்ப் போயிற்று.

உலகிற் சிறந்த இசை இந்திய இசையே. அதிற் சிறந்தது தமிழிசை. அதையே இன்று உழையிசையடிப்படையில் தாய்ப் பண்களையும் கிளைப்