உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

121

நடனம் அல்லது நடம் என்பது, அழகுற ஆடுவது. அது நூற்றெட்டு உடற்கரணங்களோடும் கைகால் கண்வாய் முதலிய உறுப்புக்களின் தொழில்களோடும் கூடியது. கைவினைகள் எழிற்கை தொழிற்கை, பொருட்கை என முத்திறப்பட்டு,பிண்டி அல்லது இணையா வினைக்கை யெனப்படும் ஒற்றைக்கை வண்ணம் முப்பத்து மூன்றும், பிணையல் அல்லது இணைக்கை யெனப்படும் இரட்டைக்கை வண்ணம் பதினைந்தும், கொண்டனவாகும்.

நடம் நடனம் என்னும் தென்சொற்கள், வடமொழியில்,நட்ட நட்டன என்று வலிக்கும். நட்ட என்பதினின்றும் நாட்ய என்னும் சொற் பிறக்கும்.

நடி என்னும் முதனிலை வடமொழியில் இல்லை. நிருத்த என்னும் சொல்லின் ந்ருத் என்னும் அடியையே முதனிலையாக ஆள்வர்.

தமிழ் நடனம் இன்று பரத நாட்டியம் என்று வழங்குகின்றது. பரத சாத்திரம் வடமொழியில் இயற்றப்பட்டது கி.மு 4ஆம் நூற்றாண் டாகும். அதற்கும் முந்தியது தமிழ்ப் பரதமே யென்பதை, "நாடகத் தமிழ் நூலாகிய பரதம் அகத்திய முதலாவுள்ள தொன்னூல்களு மிறந்தன," என்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரவுரைப் பாயிரத்திற் கூறியிருப்பதால் அறிந்து கொள்க.

நாடகம் என்பது கதை தழுவிவரும் கூத்து. அது பொருள், கதை (யோனி), தலைமை (விருத்தி), நிலை (சந்தி), சுவை, வகுப்பு (சாதி), குறிப்பு, விறல் (சத்துவம்), நளிநயம் (அபிநயம்), சொல், சொல்வகை, வண்ணம், வரி,சேதம் என்னும் பதினான் குறுப்புக்களையுடையது.

நாடக அரங்கு நல்ல கெட்டி நிலத்தில், ஈரடி நீளமுள்ளகோலால், எண்கோல் நீளமும் எழுகோல் அகலமும் ஒருகோல் உயரமும் உள்ளதாக அமைக்கப்பட்டு,மேலே முகடும், ஒருமுக வெழினி பொருமுக வெழினி கரந்துவர லெழினி என்னும் மூவகைத் திசைகளும், புகுவாயில் புறப்பட வாயில் (Exit) என்னும் இருவாயில்களும், உடையதாயிருந்தது.

தமிழ் நாடகமெல்லாம் இசைப்பட்டுள்ளவையே (Operas).

நாடகம் என்பது நாட்டக்க என்றும், அரங்கு அரங்கம் என்பன ரங்க என்றும், வடமொழியில் திரியும்.

அர் - அரங்கு = அறை, அரங்கு - அரங்கம் = நாடக மேடை, நாடகசாலை, விளையாடிடம், படைக்கலம் பயிலுமிடம், போர்க்களம், ஆற்றிடைக் குறை, திருவரங்கம்.

இசை நாடகம் என்பவற்றின் விரிவை என் 'முத்தமிழ்' என்னும் நூலிற் கண்டு கொள்க.