உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ்ப் பண்பாடு

169

என்று (புறம்.18), ஓர் உணவுப் பெருக்கத் திட்டத்தை விளக்கிக் காட்டினார்.

இதன் பொருள்: "வளமுள்ள பழமையான ஊரையுடைய வலிய வேந்தே! நீ மறுமையிற் செல்லக்கூடிய உலகத்தில் நுகரும் (அனுபவிக்கும்) செல்வத்தை விரும்பினாலும், உலக அரசரின் தோள் வலிமையைக் கெடுத்து நீ ஒருவனே தலைவனாக விரும்பினாலும், மிகுந்த நல்ல புகழை இவ்வுலகத்தில் நிறுத்த விரும்பினாலும், அதற்குத்தக்க செயலை இப்போது கேட்பாயாக. பெரியோனே! நீரையின்றி யமையாத உடம்பிற் கெல்லாம் உணவு கொடுத்தவர் உயிர் கொடுத்தவராவர். உணவை முதற் கருவியாகவுடையது அவ்வுணவால் உள்ளதாகும் உடம்பு. ஆதலால், உணவென்று சொல்லப்படுவது நிலத்தோடு கூடிய நீர்.அந்நீரையும் நிலத்தையும் ஒருவழிச் சேர்த்தவர் இவ்வுலகத்தில் உடம்பையும் உயிரையும் படைத்தவராவர். நெல் முதலியவற்றை விதைத்து மழையை எதிர்ப்பார்க்கும் நீர்வளமற்ற நிலம் இடமகன்ற பரப்புள்ளதாயினும், பொருந்தி யாளும் அரசனது முயற்சிக்கும் பயன்படாது. ஆதலால், கொல்லும் போரைச் செய்யும் பாண்டியனே! இதை இகழாமல் விரைந்து நிலங் குழிந்த விடங்களில் நீர் பெருகத் தேக்கினோர், தாம் செல்லும் உலகத்துச் செல்வம் முதலிய மூன்றையும் இவ்வுலகத்துத் தேக்கினோராவர். அந்நீரைத் தேக்கா தோர் அவற்றையும் தேக்காதோரே யாவர்." என்பது.

3. அரசர் பண்பாடு

பண்டைத் தமிழரசர் தம்மை ஆளும் தலைவர் எனக்கருதாது, காக்கும் தந்தையர் போன்றே கருதினர். அதனால் காவலர் என்றும் புலவலர் என்றும் பெயர் பெற்றார்.

அரசனாலும் அரசியலதிகாரிகளாலும் பகைவராலும் கள்வர் கொள்ளைக்காரராலும், காட்டுவிலங்காலும் நேரக்கூடிய, ஐவகைத் துன்பமாகிய வெயிலினின்றும் குடிகளைக் காத்து, இன்பமாகிய நிழலைத் தருபவன் என்னும் கருத்திலேயே, குடை அரசச் சின்னங் களுள் ஒன்றாகக் கொள்ளப்பட்டது.

"ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ

மாக விசும்பின் நடுவுநின் றாங்குக்

கண்பொர விளங்கும் நின்விண்பொரு வியன்குடை வெயிலில் மறைக் கொண்டன்றோ அன்றே வருந்திய குடிமறைப்பதுவே கூர்வேல் வளவ"

என்று (புறம். 35), வெள்ளைக்குடி நாகனார் பாடுதல் காண்க. வெண்மதி போன்ற தண்மையையும் குற்றமற்ற தூய்மையையும் குறிக்க, அரசன் குடை வெண்பட்டினாற் செய்யப்பட்டு வெண் கொற்றக் குடை எனப் பட்டது.