உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

பீசப்பூர் என்னும் விசயபுரச் சுலுத்தானின் படைகள் 1659-ஆம் ஆண்டு வல்லத்தின் மேற் சென்ற போது, விசயராகவ நாயக்கரும் அவர் படைஞரும் கோட்டையை விட்டுவிட்டு ஓடிப் போய்விட்டனர். அன்று வல்லத்தைக் கெள்ளையடித்துப் பெரும் பொருள் கவர்ந்த கள்வர், சுலுத்தான் படைகள் திரும்பியபின், தாம் கவர்ந்ததில் ஒரு பகுதியை விசயராகவ நாயக்கருக்கு மீளக் கொடுத்துவிட்டனர்.

இந்நூற்றாண்டிலும் கள்வரும் கொள்ளைக்காரரும் பல இடங்களிற் பண்பாடு காட்டியுள்ளனர். மன்னார் குடியிலிருந்த ஒரு பண்ணையார் (மிராசுதார்) தம் பெருங் குடும்பத்துடன் இராமேசுவரம் போய்ப் பல வண்டிகளில் திரும்பும்போது, வழிப்பறித்த கொள்ளைக் கூட்டத் தலைவன், அப்பண்ணையாரின் மனைவியார் ஈகையாட்டியரா யிருந்ததினால், அவர் இருந்த வண்டியை மட்டும் தானே காவல்செய்து கவராது விட்டுவிட்டான்.

வறண்ட நிலத்துப் பாலைவாணர் இக்காலத்தும் இங்ஙனம் ஒழுகின், வளமிக்க அக்காலத்தில் ஏனை நிலவாணர் எங்ஙனம் இருந்திருப்பர் என்பதை ஒருவாறு உய்த்துணரலாம்.

7. பெண்டிர் பண்பாடு

உயர்குடிப் பெண்டிர் கொண்டிருந்த கற்புக் குணங்களுள், நாணமும் பயிர்ப்பும், பண்பாட்டுக் குணங்களாம். கணவன் பெயர் சொல்லாமை, அவன் சொல்லைத் தட்டாமை, அவன் குற்றத்தை மறைத்தல், பின்னுண்டல், பின்தூங்கி முன்னெழுதல், விருந்து மிக வரினும் சலியாமை, கணவனில்லாக் காலத்துத் தன்னை அணி செய்யாமை, அவன் இறப்பின் உடன்கட்டையேறல் அல்லது வேறு வகையில் உயிர் துறத்தல், அவனுக்குப்பின் உயிர் வாழ நேரின் மறு மணம் செய்யாமை ஆகியவை, கற்புடை மனைவியர் பண்பாட்டுக் குணங்களாகும்.

மறக்குல மகளிர் மறப்பண்பு, தன்மானம், அரசப் பற்று, நாட்டுப் பற்று முதலிய பண்பாட்டுக் குணங்களை உடையவராயிருந்தனர்.

பொது மகளிரோடு சேர்த்தெண்ணப்படும் நாடகக் கணிகையர் கூட, ஒரு கணவனொடு கூடி வாழ்வதைக் கொள்கையாகக் கொண்டிருந்தனர். அரசர்க்கும் பெருஞ்செல்வர்க்கும் காமக்கிழத்தி யராதற்குரியவர் அவரே. மாதவி கோவலனின் காமக்கிழத்தி யானமையும், அவன் கொலையுண்டபின் மகளொடு துறுவு பூண்டமையும், காண்க.

இங்ஙனம், தமிழர் முதன் முதல் நாகரிகப் பண்பாட்டைக் கண்டும், ஆரியர் வருமுன் எல்லாத் துறையிலும் தலைசிறந்த நாகரிகமும் பண்பாடும் உடையவராயிருந்தும், பிற்காலத்தில் அயலாரை நம்பி அடிமைப்பட்டும் அறியாமைப்பட்டும் வறுமைப்பட்டும் சிறுமைப்பட்டும் போயினர். இதன் விளக்கத்தை என் 'தமிழர் வரலாறு' என்னும் நூலுட் காண்க.