உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு-1

மந்திரம் என்னும் சொல் வரலாறு

தென்சொல்லா வடசொல்லா என்னும் ஐயுறவிற் கிடமான தென் சொற்களுள் மந்திரம் என்பதும் ஒன்றாகும். அது வட மொழியில் வழங்கு வதாலும், அது வடசொல்லேயென ஆரியர் வலிப்பதாலும், பொலிவொலி யுற்றிருப்பதனாலும், வாய்மொழி யென்னும் எள்ளளவும் ஐயுறவிற் கிடந்தராத) வேறொரு தென்சொல் லுண்மையாலும், தலைமைப் பதவி தாங்கும் தமிழ்ப் பேராசிரியரும் தமிழ் வரலாற்றறிவும் மொழியாராய்ச்சியு மின்மையால் அது வட சொல்லேயென மயங்கு கின்றனர்.

வட மொழியிலுள்ளவையெல்லாம் வடசொல் அல்லவென்றும், வட சொற்களுட் குறைந்த பக்கம் ஐந்திலிரு பகுதி தென்சொல் என்றும், முன்னரே கூறப்பட்டது. தமிழில் தனிப்பட்ட பொலிவொலி அல்லது எடுப்பொலியின்றேனும், மெலிவலி யிணைந்துவரின் பொலி வொலியாம் என்னும் உண்மையை, தங்கம், நெஞ்சம், பண்டம். முந்திரி, பம்பரம், குன்றம் என்னும் தூயதென் சொற்களை ஒலித்துக் காண்க.

(தமிழ் ஒப்புயர்வற்ற முதுபழந் தொன்மொழி யென்பது மட்டுமன்றி, மாபெருஞ் சொல்வள மொழி யென்பதும், கருத்தில் இருத்துதல் வேண்டும். அதன் சொல் வளத்தை விளக்குதற்கு, தமிழ் தனக்கேயுரிய வீடு என்னும் சொல்லோடு, தெலுங்கிற்குரிய இல்(லு) என்னும் சொல்லையும், கன்னடத் திற்குரிய மனையென்னும் சொல்லையும், வட மொழிக்கும் பின்னிய மொழிகட்கும் உரிய குடி என்னும் சொல்லையும், தன்னகத்துக் கொண்டுள்ள தென்று கால்டுவெலார் எடுத்துக் காட்டியதையும், நோக்குதல் வேண்டும்.) ஈ,தா, கொடு என்னும் ஒரு பொருட் சொற்களுள், ஈ என்னும் சொல்லைத் தெலுங்கு கொண்டுள்ளது போன்றே, தா என்னும் சொல்லை ஆரிய மொழிகளெல்லாம் கொண்டுள்ளன. இங்ஙனம் தாய்மொழிக்குரிய ஒரு பொருட் சொற்களுள், ஒவ்வொன்றைக் கிளைமொழிகள் கொண்டு வழங்குவது கிளைமொழித் தெரிப்பு (Dialectic Selection) எனப்படும். இது தாய் வீட்டிலுள்ள ஒரு வகைப் பல்வேறு கலங்களுள் ஒவ்வொன்றை 7மகளிர் எடுத்துக்கொள்வது போன்றது. ஆகவே, வாய் மொழி என்னும் வேறொரு சொல்லுண்மையால் மந்திரம் என்பது வட சொல்லாகி விடாது.

ஒரு சொல் எம்மொழிக்குரியதென்று காண்டற்கு, வரலாற்றொடு பொருந்திய சொல்லாராய்ச்சியும் மொழியாராய்ச்சியும் செய்வதே சிறந்த வழியாம்.