உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

குமரன், குமரி என்னும் தூய தமிழ்ச் சொற்களைக் குமார, குமாரீ என நீட்டி, முறையே, மகன், மகள் என்னும் பொருள்களிற் சிறப்பாய் ஆள்வதுடன் குமார என்பதைக் கு + மார எனப் பிரித்து, மரியாதவன் என்று பொருந்தப் பொய்த்தலாகப் பொருள் கூறி வடசொல்லாகக் காட்டுவர் வடமொழியாளர். இவ்விரு சொற்கட்கும் இளமைப் பொருளே சிறந்திருத்தலை, வழக்கு நோக்கியும், "கோடிச் சேலைக்கு ஒரு வெள்ளை, குமரிப் பெண்ணுக்கு ஒரு பிள்ளை” என்னும் பழமொழி நோக்கியும், உணர்க.

இளமைக்குப்பின் மூப்பும் சாக்காடும் நேர்வதால் இளமைக் கருத்தின்றே அழியாமைக் கருத்துத் தோன்றும். எவ்வளவு உடலுரம் பெற்றவராயினும் நகைச்சுவையும் உவமையும் பற்றியன்றிக் கிழவன் கிழவியைக் குமரன் குமரியென்னும் வழக்க மின்மை காண்க.

குமரிக் கண்டத்தின் வடகோடியில், குமரி என ஒரு பேரியாறு மிருந்தது. மதிரை-மதுரை

மதுரை என்பது குமரி மலைத் தொடரிற் பிறந்து கிழக்கு முகமாய் ஓடிக் கீழ் கடலிற் கலந்ததும், கங்கை போலும் பெரியதுமான பஃறுளி யாற்றங்கரையில் அமைந்த பாண்டியரின் முதல் தலைநகரும் தலைக்கழக இருக்கையுமாகும்.

பாண்டியர் திங்கள் குலத்தாராகலின், தம் குல முதலாகக் கருதிய மதியின் பெயரால், தம் முதல் தலைநகர்க்கு மதிரை எனப் பெயரிட்டனர். அது பின்னர் மதுரை எனத்திரிந்தது.

ஒ.நோ: குதி - குதிரை, எதிர்கை - எதுகை.

குமரிமலை முழுகுமுன்போ முழுகிய பின்போ, குமரி நாட்டினின்று வடக்கே சென்ற தமிழர் வழியினரே, கண்ணபிரான் வாழ்ந்த மதுரையையும் அமைத்தனர். அதற்கு அப்பெயரிட்டது, அவர்தம் முன்னோர் இடத்தை நினைவு கூர்தற்பொருட்டாகும். கண்ணபிரான் ஒரு திரவிட மன்னனே என்பது, என் 'தமிழர் வரலாறு' என்னும் நூலில் விளக்கப் பெறும்.

கண்ணபிரான் காலமாகிய பாரதக் காலத்தில் வைகை மதுரையில்லை. ஆதலால், நாவலந்தேயத்தில் இரண்டாவது ஏற்பட்டதும் வடமதுரை யெனப் பட்டதும் கண்ணன் மதுரையே. அதன் பெயர் அந்நாட்டு மொழிக்கேற்ப மத்ரா எனப் பின்னர்த் திரிந்தது.

சிவபெருமான் தன் சடைமுடியிலுள்ள மதியினின்று மதுவைப் பொழிந்த இடம் மதுரை என்பது, தொல்கதைக்கட்டு.