உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

15

வைகை மதுரையைச் சார்ந்த திருமருத முன்றுறையால் மதுரைப் பெயர் வந்த தென்பது, பேரன் பெயரால் பாட்டன் பெயர் பெற்றான் என்னும் கூற்றை ஒக்கும். மதுரையென்று முதலிற் பெயர் பெற்றது பஃறுளி பாற்றங்கரையது, என்பதை மறந்து விடல் கூடாது.

கன்னி

முழுகிப்போன குமரிக் கண்டம், தென் கோடியில் குமரி என்னும் மலைத் தொடரையும் வடகோடியில் குமரி என்னும் பேரியாற்றையும் கொண்டிருந்தமை, முன்னர்க் கூறப்பட்டது.

"வடவேங்கடம் தென்குமரி” என்னும் தொல்காப்பியச் சிறப்புப்பாயிர

அடியிற் குறிக்கப் பட்டது குமரியாறே.

பரதன் என்னும் மாவேந்தனின் மகளாகிய குமரியின் பெயரால்,

பெயர் பெற்றது குமரிக் கண்டம் என்பதும், தொல்கதைக்கட்டே.

குமரி, கன்னி என்பன ஒரு பொருட் சொற்களாதலால், குமரியாறு கன்னியெனவும்படும்.

"மன்னு மாலை வெண்குடையான்

வளையாச் செங்கோ லதுவோச்சிக்

கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி"

என்னும் சிலப்பதிகாரக் கானல் வரிப்பாடல், குமரியாற்றைக் கன்னி யெனக் குறித்தல் காண்க. கன்னி என்பதும் காளியின் பெயரே.

கன்னி என்னும் சொல், மக்களினத்துப் பெண்ணைக் குறிக்கும் போது, பூப்படைந்து மணமாகாத பெண்ணைக் குறிக்கும். ஒரு பெண் வாழ்நாள் முழுதும் மணமாகாதிருக்கலாமாதலால், இளங்கன்னி கன்னி கையெனப்படுவாள். கை என்பது ஒரு குறுமைப்பொருள் பின்னொட்டு (Di- minutive suffix).

ஒ.நோ: குடி(வீடு) - குடிகை (சிறுவீடு) - குடிசை.

பூப்படையாத சிறுமியையும் மணமான பெண்ணையும், கன்னி யென்று சொல்லும் வழக்கமில்லை. கன்னி கழிதல், கன்னியழிதல், கன்னியழித்தல் என்னும் வழக்குகளை நோக்குக.

கன்னி என்னும் சொல்லைக் கன்யா என்றும், கன்னிகை என்னும் சொல்லைக் கன்யகா என்றும், வடமொழியாளர் திரித்து, சிறுமி, மகள் என்ற பொருள்களிலும் வழங்குவர். அதற்கேற்ப, கன் (திகழ்), கன (சிறு) என்பவற்றை வேராகக் காட்டுவர்.