உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. மொழி

I. பண்டைத் தமிழ் நாகரிகம்

பொதுமக்கள் அமைப்பு: ஒரு நாட்டுமக்களின் நாகரிக நிலையைக் காட்டுவது அவர் தாய் மொழியே. எந்நாட்டிலும், மொழி பொதுமக்கள் அமைப்பென்றும் இலக்கியம் புலமக்கள் அமைப்பென்றும், அறிதல் வேண்டும்.

இடுகுறி யெதுவுமின்றி ஒரு பொருட் பல சொற்களும் நுண்பொருட் பாகுபாட்டுச் சொற்களும் நிறைந்து, பகுத்தறிவிற் கொத்த சிறந்த இலக்கணம் அமைந்து, எல்லாக் கருத்துக்களையும் தன் சொற்களாலேயே தெள்ளத் தெளிவாகத் தெரிவிப்பது தலைசிறந்த மொழியாம்.

முழுகிப் போன குமரிக் கண்டத் தென் கோடியடுத்து, நிலவளமும் நீர்வளமும் உணவுவளமும் பொன் வளமும் மணி வளமும் நிறைந்திருந்த பழந்தமிழ்நாட்டில், வாழ்ந்துவந்த முதற்காலத் தமிழ் மக்கள் இக்காலப் புலவரினும் சிறந்த நுண்மாண் நுழைபுலத்தின ராதலின், காட்சி, கருத்து என்னும் இருவகைப் பொருள்களையும் கூர்ந்து நோக்கியும் நுணுகியாராய்ந்தும், அவற்றின் சிறப்பியல்பிற் கேற்ப அழகிய பொருட் (கரணியக்) குறிகளாகவே எல்லாச் சொற்களையும் வேறுபடுத்தல், ஒன்று படுத்தல், இனப்படுத்தல் என்னும் மும்முறையில் அமைத்திருக்கின்றனர்.

வேறுபடுத்தல்

நால்வகையிலை :

சில பூண்டுகளிலும், செடி கொடிகளிலும், வாழை, மா, புளி முதலிய மரங்களிலும், கிளை நுனியிற் காம்புடன் தனித்தும் அடர்ந்தும் பெரும்பாலும் முட்டை வடிவில் மெல்லியதாயிருப்பது இலை.

புல்லிலும் நெல், வரகு போன்ற பயிர்களிலும், நுனியிலும் தண்டையொட்டியும் ஈட்டிபோல் ஒடுங்கி நீண்டு சுரசுரப்பாயிருப்பது தாள்.

கரும்பிலும், சோளம், நாணல் போன்ற பெருந்தட்டைகளிலும், நுனியிலும் கணுவொட்டியும் பெருந்தாளாக ஓங்கி மடிந்து தொங்குவது தோகை.