உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

சோறுண்பவர், வாயும் முகமும் கைகாலும் கழுவியபின், துப்புரவான

இடத்தில் தடுக்கில், அல்லது பலகையில் அமர்ந்து சப்பளித்திருந்து (சம்மணங்கூட்டி உட்கார்ந்து), கழுவிய வாழை இலையில் அல்லது வெண்கல வட்டிலில் வலக்கையாலேயே எடுத்து உண்பர். அரசர் பொற் கலத்திலும் செல்வர் வெள்ளிக் கலத்திலும் உண்பது வழக்கம். பெற்றோரும் பெற்ற சிறு பிள்ளைகளுமா யிருந்தாலொழிய, ஒரே கலத்தில் அல்லது இலையிற் பலர் உண்பதில்லை. உண்டெழுந்தபின், உண்ட இடம் இலை யகற்றித் தண்ணீர் அல்லது சாண நீர் தெளித்துத் துப்புரவாக்கப்பெறும். இலையில் விட்ட மிச்சிலைப் பெற்றோரும் மனைவியரும் இரப்போரும் தவிரப் பிறர் உண்ணார். சில உணவு வகையால் ஏற்படும் வாய் நாற்றத்தைப் போக்குதற்கு, நறுமணச் சரக்கை வாயிலிடுதல், வெற்றிலை தின்னுதல், மார்பிற் சந்தனம் பூசுதல் முதலியவற்றைக் கையாள்வர். இவற்றைச் செரிமானத்தின் பொருட்டென்று சொல்வது முண்டு.

விடிந்தவுடன் பெண்டிர் முற்றங்களிற் சாணந்தெளித்து வீடு வாசலைப் பெருக்கிக் கோலமிடுவர். செவ்வாயும் வெள்ளியும் தப்பாது வீடு முழுதும் ஆவின் சாணத்தால் மெழுகுவர். ஆண்டிற்கொரு முறையும் திருமணம் நிகழும் போதும், வீடு முழுதும் ஒட்டடை போக்கி வெள்ளையடித்துச் செம்மண் கோலமிடுவது வழக்கம். ஆண்டிற்கொரு முறையென்றது பொங்கற் பண்டிகை. பொங்கற்கு முந்தின நாள், இன்றுபோல் அன்றும் வீட்டிலுள்ள அழுக்குக் கந்தல்களையும் உதவாப் பொருள்களையும் கொளுத்தி விடுவர். அதோடு தங்களைப் பிடித்த பீழை போய்விட்டது என்னுங் கருத்தில், அதைப் போகி என்றனர். போகுதல் போதல். போகியது போகி. அச் சொல்லை வேந்தன் (இந்திரன்) பெயராகக் கொண்டு, அவனை நோக்கிச் செய்யும் விழா என்பது பொருந்தாது. "தை பிறந்தால் வழி பிறக்கும் ” என்னும் பழமொழி, போகி என்னுஞ் சொற்பொருளை வலியுறுத்தும்.

"

வாடகை வீடுகளிற் புதுக் குடி புகும்போதும், ஒட்டடை போக்கி வெள்ளையடிக்கப் பெறும்.

வெளிச் சென்று வந்த வீட்டாரும் வெளியாரும், வீட்டிற்குள் புகுமுன் பாதத்தைக் கழுவிவிட வேண்டும் என்பது ஒழுக்க நெறி.

வெப்பமில்லாத நாளிலும் வேளையிலும் முள்ளில்லாத இடத்திலும் கூட, வீட்டை விட்டு வெளிச் செல்லின், அடியில் மண்ணும் மாசும் படாதபடி செருப்பணிந்தே செல்வர் உயர்ந்தோர். செருப்பு வாசற்கு வெளியே அல்லது வாசலண்டைதான் விடப்பெறும். எக் கரணியம் பற்றியும் உள்ளே கொண்டு செல்லப் படுவதில்லை.

பிள்ளை பெற்ற வீட்டிற்கு ஏழு நாளும், மாதவிடாய் வந்தவளுக்குப் பன்னிரு நாளும், இழவு வீட்டிற்குப் பதினைந்து நாளும் தீட்டாம்.