உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

59

காமத்தை ஒரு தலைக்காமம், இருதலைக்காமம், பொருந்தாக் காமம் என மூவகையாய் வகுத்தனர் முன்னோர். ஓர் ஆடவனும் பெண்டுமாகிய இருவருள், ஒருவர் மட்டும் காதலிப்பது ஒரு தலைக் காமம்; இருவரும் காதலிப்பது இரு தலைக் காமம்; யாரேனும் ஒருவர் நெறிதவறிக் காதலிப்பது பொருந்தாக் காமம். இவற்றுள் இரு தலைக் காமமே சிறந்ததாகவும் நெறிப் பட்டதாகவும் கொள்ளப்பட்டது. பெற்றோரும் மற்றோரு மின்றித் தாமாகக் கூடுவதெல்லாம், பெரும்பாலும் இருதலைக் காமமாகவேயிருக்கும்.

ரு

காமத்தை அகப்பொருள் என்றும், ஒருதலைக் காமத்தைக் கைக்கிளை என்றும், இருதலைக் காமத்தை அன்பின் ஐந்திணை என்றும்; பொருந்தாக் காமத்தைப் பெருந்திணை என்றும் இலக்கணம் கூறும். அன்பின் ஐந்திணையே நெறிப்பட்டதாகக் கொள்ளப் பட்டதினால் அதையே அகம் என்று சிறப்பித்தும், ஏனை யிரண்டையும் அகப்புறம் என்று இழித்தும், கூறுவர் இலக்கணியர்.

கைக்கிளை, குறிப்பு என்றும் மணம் என்றும் இருவகையாய்ச் சொல்லப்படும். ஒருவன் காமவுணர்ச்சியில்லாத ஒரு சிறுமியிடம் அல்லது காதலில்லாத ஒரு பெண்ணிடம், சில காதற் குறிப்புச் சொற்களை மட்டும் தானே சொல்லியின்புறுதல் கைக்கிளைக் குறிப்பாம். பெற்றோராற் கூட்டப் பெற்ற கணவன் மனைவியருள், யாரேனும் ஒருவர் காதலில்லாமலே இசைந்திருப்பின் அது கைக்கிளை மணமாம். கைக்கிளை ஒருபக்கக் காதல். கை பக்கம். கிளை காதல்.

ஒரு பெண்ணை மணவுறவு முறை தப்பியோ, வலிந்தோ, ஏமாற்றியோ, தூக்க நிலையிலோ, நோய் நிலையிலோ, இறந்த பின்போ பூப்பு நின்ற பின்போ கூடுவதும், தன்பாலொடும் விலங்கொடும் கூடுவதும், பெருந்திணையாம். இது இங்ஙனம் பலவகையாய்ப் பெருகியிருப்பதாற் பெருந்திணை யெனப் பட்டது. தமிழுக்குச் சிறப்பான பொருளிலக்கணம் ஆரிய வருகைக்கு எண்ணாயிரம் ஆண்டுகட்கு முன்பே அமைந்து விட்டதனால், ஆரிய வொழுக்க நூல்களிற் சொல்லப்பட்ட எண்வகை மணத்துள்தான் ஒன்றே நால்வகை பெற்றதினால் பெருந்திணை யெனப்பட்ட தென்பது, கால மலைவும் நூன் மலைவுங் கலந்த பெருவழுவாம்.

பெற்றோர் செய்து வைக்கும் மணம், பேச்சு மணமும் அருஞ் செயல் மணமும் என இருதிறப்படும். மணவாளப் பிள்ளை வீட்டார் போய்க் கேட்க, பெண் வீட்டார் இசைந்து பெண் கொடுப்பது பேச்சு மணம்; பெண்ணின் பெற்றோர் குறித்த ஓர் அறவினையோ மறவினையோ செய்து பெண்ணைக் கொள்வது அருஞ்செயல் மணம். பண்டைத் தமிழகத்தில் கொல்லேறு தழுவி அதற்குரிய பெண்ணை மணப்பது முல்லை நில வழக்கமாயிருந்தது. மணமான அன்றே மணமக்கள் கூடுவர்.