உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

கொடுப்பாரும் அடுப்பாருமின்றிக் காதலர் தாமாகக் கூடும் கூட்டம், மறைவாகத் தொடங்குவதும் வெளிப்படையாய்த் தொடங்குவதும் என இருவகைப்படும். மறைவான கூட்டம் களவு என்றும், வெளிப்படையான கூட்டம் கற்பு என்றும், சொல்லப்பெறும். களவு பெரும்பாலும் இருமாதத் திற்குட்பட்டேயிருக்கும். அது வெளிப்பட்டபின் கற்பாம். கற்பெல்லாம் கரணம் என்னும் தாலிகட்டுச் சடங்கோடும் பந்தலணி, மணமுழா, வாழ்த்து, வரிசை உற்றாருடன் உண்ணும் உண்டாட்டு முதலியவற்றோடும் கூடிய மணவிழாவொடும் தொடங்கும். களவுக் காலத்தில் கூட்டம் தடைப் படினும், பெண்ணின் பெற்றோர் பிறர்க்குப் பெண் கொடுக்க இசையினும், காதலன் காதலியைக் கூட்டிக் கொண்டு வேற்றூர் சென்றுவிடும் உடன் போக்கும் உண்டு. அவர் திரும்பி வந்தபின், காதலன் வீட்டிலேனும் காதலி வீட்டிலேனும் வதுவை என்னும் மணவிழா நிகழும்.

இனி, களவுக்காலத்தில் கூட்டம் தடைப்படுவதால், காதலி தன் காதலனைக் காணப் பெறாமல் மனம் வருந்தி மேனி வேறுபடும்போது, பெற்றோர் வேலன் என்னும் மந்திரக்காரனை வரவழைத்து தம் மகள் நோய்க்குக் கரணியம் (காரணம் ) வினவுவதும், அவன் அது முருகனால் நேர்ந்ததென்று கூறி, வெள்ளாட்டுக் கறியும் கள்ளும் விலாபுடைக்க வுண்டு வெறியாட்டு என்னும் கூத்தை நிகழ்த்தி அந்நோயைப் போக்குவதாக நடிப்பதும் உண்டு. அன்று காதலி நேராகவோ தன் தோழி வாயிலாகவோ, தன் பெற்றோரிடம் உள்ளதைச் சொல்லி விடுவாள். அது அறத்தோடு நிற்றல் எனப்படும். தன் காதலனன்றி வேறு யார்க்கும் தன்னைப் பேசினும், காதலி அறத்தொடு நிற்பாள்; அதன்பின் காதலனுக்கு மணஞ் செய்து வைக்கப் பெறுவாள். மணமகன் அல்லது அவன் வீட்டார் மணமகளுக்குப் பரிசம் கொடுப்பர். மணமகன் பரிசம் பெறும் நாகரிக மானங்கெட்ட ஆரிய இழிவழக்கு அக்காலத்தில்லை.

தமிழ்ப் பெண்டிர் கற்பிற் சிறந்தவராதலின், ஒருவரை மணந்தபின் அல்லது காதலித்த பின் வெறோருவரையும் கனவிலும் கருதுவதில்லை; வேறு எவரையேனும் மணக்க நேரின், உடனே உயிரை விட்டு விடுவர்.

காதலர் கூடும் கூட்டம், உடம்பாற் கூடுவதும் உள்ளத்தாற் கூடுவதும் என இருவகை. இவற்றுள் முன்னது மெய்யுறு புணர்ச்சி என்றும், பின்னது உள்ளப்புணர்ச்சி என்றும், சொல்லப்பெறும். கற்புடைப் பெண்டிர்க்கு இரண்டும் ஒன்றே. இதனாலன்றோ, திலகவதியம்மையார் தமக்குப் பேசப் பெற்றிருந்த கலிப்பகையார் போர்க் களத்திற் பட்டபின் இறக்கத் துணிந்ததும், அதன் பின் தம் ஒற்றைக்கொரு தம்பியார் திருநாவுக்கரசரின் பொருட்டு உயிர் தாங்கியதும், இறுதி வரை மணவாதிருந்ததும், என்க.