உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

71

சொற்றொகுதியில், முனிவரைப் பற்றியது ஐயர் தொகுதி என்று பெயர் பெற்றிருத்தல் காண்க.

துறவியருள், காட்டில் வதியும் முனிவரைப் போன்றே, நாட்டில் வதியும் (திருவெண் காட்டடிகளும் தாயுமான அடிகளும் இராமலிங்க அடிகளும் போன்ற) அடிகளாரும் ஆதனியல் (ஆத்மீக) வளர்ச்சியும் ஆக்க வழிப்பாற்றலும் அருள் வடிவும் பெற்றவராதலின், ஐயர் என்றழைக்கப் பெறுவர்.

66

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப."

என்னும் தொல்காப்பிய நூற்பாவின் (1088) குறிக்கப் பெற்ற ஐயர் என்பார் இராமலிங்க அடிகள் போலும் அருள் வடிவத் தமிழத் துறவியரே.

இனி, இறைவனடியாரும் பெரியோராதலாலும், நாயனார் என்றும் தேவர் என்றும் பெயர் பெற்றிருத்தலாலும், துறவியர் போல் இறைவன் பற்றுடைமையாலும், ஐயர் என்னும் பெயருக்குரியர்.

"சார்வலைத் தொடக்கறுக்க ஏகும்ஐயர்” என்று, கண்ணப்ப நாயனார் புராணத்தில் (70) அந்நாயனாரையும், "ஐயரே! அம்பலவர் அருளாலிப் பொழுதணைந்தோம்" என்று, திருநாளைப் போவார் நாயனார் புராணத்தில் (30) அந்நாயனாரையும்; “அளவிலா மகிழ்ச்சி யினார் தமைநோக்கி ஐயர்நீர்" என்று, திருஞானசம்பந்த நாயனார் புராணத்தில் (133) திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரையும்; உயர்வுப்பன்மை வடிவில் ஐயர் என்று சேக்கிழார் குறித்திருத்தல் காண்க.

மக்களினும் உயர்ந்த வகுப்பார் தேவராதலின், ஐயன் என்னும் சொல் தேவன் என்றும் கடவுள் என்றும் பொருள்படும். தேவன் என்னும் பொருளில் அது சாத்தனையும், கடவுள் என்னும் பொருளில் சிவனையும் குறிக்கும். சாத்தனை ஐயனார் என்பது மரபு.

இல்லறத்தாருள் ஒருவனுக்கு அரசன், ஆசிரியன், தந்தை, தாய், தமையன் என்று ஐவகைப் பெரியோரிருப்பதால், அவர் ஐங்குரவர் என்றும்; அவருட் சிற்ந்த பெற்றோரிருவரும் இரு முதுகுரவர் என்றும் அழைக்கப் பெறுவர். குரவன் பெரியோன்.

=

தந்தையைக் குறிக்கும் ஆயான், ஆஞான் என்னும் முறைப் பெயர்களும், ஐயன் என்பதன் திரிபாகவே தோன்றுகின்றன. ஆயான் தந்தை, அண்ணன். ஆயான் - ஆஞான் = தந்தை. ஒ.நோ: வலையன் - வலைஞன்.