உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

அரசனாகி வானுலகத்தினின்று மழையைப் பொழிவிக்கின்றான் என்று பண்டை மருத நிலமக்கள் கருதியதால், மழைத் தெய்வத்தை வேந்தன் என்னும் பெயரால் வணங்கி வந்தனர்.

ஆரியர் வருமுன்பே, மொழி வேறுபாட்டினால் வேந்தனுக்கு வடநாட்டில் வழங்கி வந்த பெயர் இந்திரன் என்பது. இந்திரன் அரசன். ஆகவே இரண்டும் ஒரு பொருட் சொற்களே. வேத ஆரியர் இந்திர வணக்கத்தை, வடநாட்டுத் திரவிடரைப் பின்பற்றியே மேற் கொண்டிருத்தல் வேண்டும். மேலையாரிய நாடுகளில் இந்திர வணக்கமே யிருந்ததில்லையென்று, மாகசு முல்லர் (Max Muller) கூறியிருப்பது, இங்குக் கவனிக்கத்தக்கது.

கடைக் கழகக் காலம் வரை காவிரிப்பூம்பட்டினத்தில் நடைபெற்று வந்த இந்திர விழாவும், தமிழர் வேந்தன் விழாவே.

வாரணன் = கடல் தெய்வம். வாரணம் கடல். கடலுக்கு ஒரு தெய்வமிருப்பதாகக் கருதி, அதை நெய்தல் நிலமக்கள் வணங்கி வந்தனர்.

முதற்காலத் திரவிடர் வடமேற்காய்ச் சென்று கிரேக்க நாட்டிற் குடியேறியபின், வாரணம் என்னும் சொல் (ouranos) எனத் திரிந்தது. அப்பெயர்த் தெய்வம் முதலிற் கிரேக்கர்க்குக் கடல் தெய்வ மாகவேயிருந்து, பின்பு, வானத்தெய்வமாயிற்று. கிரேக்கத்திற்கு மிக நெருங்கிய மொழியைப் பேசிவந்த கீழையாரியருள் ஒரு பிரிவாரான வேத ஆரியர், கடலை யறியாமல் நெடுகவும் நிலவழியாகவே வந்ததினால், மழைத்தெய்வத்தையே வருணா என அழைத்தனர். அவர் இந்தியாவிற்குட் புகுந்து வடநாட்டுத் திரவிடரோடும் தென்னாட்டுத் தமிழரோடும் தொடர்பு கொண்ட பின்னரே, வருணனைக் கடல் தெய்வமாகக் கருதத் தொடங்கினர். ஆயினும், இன்னும் மழைக்காக வருணனை வேண்டுவதே பிராமணர் வழக்கமா யிருந்து வருகின்றது.

தொல்காப்பியத்தில் “வருணன் மேய பெருமணலுலகமும்” (அகத். 5) என்று, வாரணன் என்னும் பெயரை வடமொழி வடிவிற் குறித்திருப்பது தவறாகும். அது "வாரணன் மேய ஏர்மண லுலகமும்” என்றிருந்திருத்தல் வேண்டும்.

ஐந்திணைத் தெய்வ வழிபாடுகளுள், சேயோன் வழிபாடும் மாயோன் வழிபாடும் பிற்காலத்தில் இருபெருஞ்சமயங்களாக வளர்ச்சியடைந் துள்ளன.

ஐந்திணைத் தெய்வங்களும் தமிழ்த் தெய்வங்களே யென்றும், பிற்காலத்தில் ஆரியர் அவற்றைப்பற்றிப் பல்வேறு கதைகள் (புராணங் கள்)