உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வணிகமும் போக்குவரத்தும்

103

தென்னாட்டுச் சீமைகளும் சாலைகளால் இணைக்கப்பட்டிருந்தமை புலனாம்.தொண்டைநாட்டின் மேற்கெல்லை ஒரு பெரு வழியாயிருந்த தென்பது, 'மேற்குப் பெருவழியாம்' என்னும் கம்பர் கூற்றால் அறியப்படும். ஆங்காங்குள்ள ஊரவையார் அவரவர் ஊரருகே யுள்ள தடிவழிப் பகுதிகளைக் கவனித்து வந்தனர்.

வேட்டைக்குச் சென்ற அரசன் “நெடுமான் றேரொடு பாகனை நிலவுமணற் கான்யாற்று நிற்கப் பணித்து.......இரும்பொழில் புகும்" என நக்கீரர் கூறியிருப்பதால், இயன்ற விடமெல்லாம் சங்கக்காலத் தரசர் தேரேறிச் சென்றனரென்றும், அதற்குரிய வழிவசதிகள் அமைக்கப் பட்டிருத்தல் வேண்டுமென்றும் ஊகிக்கலாம்.

சாலைகள் பிரியுமிடங்களில் அல்லது சேருமிடங்களில், அவ்வச் சாலை செல்லும் ஊர்ப் பெயர் பொறித்த வழிகாட்டி மரங்கள் நாட்டப் பட்டிருந்தன.

மாடு, குதிரை, கோவேறுகழுதை ஆகிய மூவகைப் பொதி மாக்களையுடைய வணிகச்சாத்துகள், அடிக்கடி சாலைகளில் யங்கிக்கொண்டிருந்தன.

கோவலனும் கண்ணகியும் கௌந்தியடிகளும் அருவிலைச் சிலம்புடன் புகாரிலிருந்து முப்பது காதத் தொலைவிலுள்ள மதுரைக்கும், தேவந்தியும் கண்ணகியின் செவிலியும் அடித்தோழியும் புகாரிலிருந்து மதுரை வழியாய் வஞ்சிக்கும், மணிமேகலை புகாரிலிருந்து வஞ்சிக்கும் பின்னர் வஞ்சியிலிருந்து காஞ்சிக்கும், மாடலன் புகாரினின்று குமரிக்கும் பின்னர்க் கங்கைக்கும், பராசரன் சோணாட்டினின்று சேர நாட்டிற்கும் பின்பு பெரும் பொருளுடன் பாண்டிநாட்டு வழியாகத் தன்னூருக்கும், யாதோர் இடர்ப்பாடு மின்றிச் சென்றதால், அக்காலத்தில் வழிப்போக்கர்க்கு வேண்டும் வழிவசதியும் பாதுகாப்பும் நிரம்ப விருந்தமை யறியப்படும்.

தமிழரசர் அடிக்கடி வடநாட்டின்மேற் படையெடுத்துச் சென்றதும்; அவருள் சேரன் செங்குட்டுவன் வடநாட்டுச் செலவில், 100 தேர்களும் 500 யானைகளும் 10,000 குதிரைகளும், 20,000 பண்ட மேற்றிய வண்டிகளும், 1,000 சட்டையிட்ட அதிகாரிகளும், மாபெருந் தொகையினரான காலாட் படைஞரும், 102 நாடக மகளிரும், 208 குயிலுவரும், 100 நகை வேழம்பரும் உடன் சென்ற தும்; அக்காலத்திருந்த போக்குவரத்து வசதியை ஒருவாறுணர்த்தும்.

‘அனுப்பு' என்றொரு வரி முற்காலத்து வாங்கப்பட்டதினால், ஒருகால் அஞ்சல் ஏற்பாடு அக்காலத் திருந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு.

நீர்ப் போக்குவரத்து: பஃறுளியாறு முழுகு முன்னரே, கிழக்கில் சாவகம் மலையா காழகம் (பர்மா) சீனம் முதலிய