உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வணிகமும் போக்குவரத்தும்

105

துறைமுகந்தோறும் கலங்கரை விளக்கம் (Light House) இருந்தது. புகார் கவாடம் வஞ்சி போன்ற தலைமை அல்லது கோநகர்த் துறைமுகங்களில், பல்வேறு நாட்டுக் கலங்கள் பல்வகைப் பண்டங்களை நாள்தோறும் ஏற்றுவதும், இறக்குவதுமா யிருந்தன. ஏற்றுமதியும் இறக்குமதியுமான அளவிடப்படாத பண்டப் பொதிகள். ஆயத்திற்காக நிறுக்கப்பட்டு அவ்வத் தமிழ்நாட்டரச முத்திரை பொறிக்கப்பட்டபின், துறைமுகத்தைவிட்டு நீங்கும்வரை சிறந்த காவல்செய்யப்பட்டிருந்தன. அணியவும் சேயவுமான பல்வேறு நாட்டிலிருந்து வந்த புலம்பெயர் மாக்கள் தங்குவதற்கு, வசதியான சேரிகளும் விடுதிகளும் இருந்தன. தமிழகக் கீழ்கடற் கரையில் நாகநாட்டார் குமரி முதல் வங்கம்வரை பல நகரங்களில் வந்து தங்கியிருந்தமையால், அவை நாகர்கோயில், நாகப்பட்டினம், நாகூர், நாகபுரி எனப் பெயர் பெற்றன. மீன் பிடிக்கும் கட்டுமரம் முதல் குதிரைப் படையேற்றத் தக்க நாவாய்வரை பலதரப்பட்ட மரக்கலங்கள் தமிழ்நாட்டு வணிகர்க்குச் சொந்தமாயிருந்தன. ஏலேலசிங்கன், கோவலன் முன்னோர், பட்டினத்தார் என்னும் திருவெண்காடர் முதலியோர் பெருங்கல வணிகராவர். "ஏலேல சிங்கன் கப்பல் ஏழுகடல் சென்றாலும் மீளும்” என்பது பழமொழி யாகும்.

சேரன் செங்குட்டுவன் “கடற்கடம் பெறிந்த காவலன்” என்றும், “கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்” என்றும் புகழப் பெறுவதால் அக்காலத்தரசர் பகைவராலும் கடற்கொள்ளைக் காரராலும் விளைக்கப் படும் தீங்குகளைப் போக்கிக் கடல் வணிகத்தைக் காத்தமை ஊகிக்கப்படும். பீலிவளை நாகநாட்டி னின்று புகார் வந்து மீளவும், மணிமேகலை ஈழத்திற்கும் சாவகத்திற் கும் சென்று மீளவும், வசதியும் பாதுகாவலுமான மரக்கலப் போக்கு வரத்து அக்காலத்திருந்தது.

"நீரின் வந்த நிமிர்பரிப் புரவியுங் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னுங் குடமலைப் பிறந்த வாரமு மகிலுந் தென்கடல் முத்துங் குணகடற் றுகிருங் கங்கை வாரியுங் காவிரிப் பயனு மீழத் துணவுங் காழகத் தாக்கமு

மரியவும் பெரியவு நெரிய வீண்டி

""

(185-192)

என்னும் பட்டினப்பாலைப் பகுதியால், புகாருக்கு வந்து சேர்ந்த இருவகை வணிகப் பொருட்பெருக்கை ஒருவாறுணரலாம்.