உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

கலையுங் கல்வியும்

பண்டைத் தமிழகத்தில் கல்வி இக்காலத்திற்போல் அரசியல் திணைக்களங்களுள் ஒன்றாக இருந்ததில்லை. ஆசிரியரின் முயற்சி யினாலும் பொதுமக்ளின் போற்றரவினாலுமே, பொதுக்கல்வி நாட்டிற் பரப்பப்பெற்று வந்தது. கற்றுவல்ல புலவரையே அரசர் ஓரளவு போற்றி வந்தனர்.

பொதுக்கல்வி: எழுத்தும் எண்ணும் கற்பித்த துவக்கக் கல்வியாசிரியர்க்கு இளம்பாலாசிரியர் என்றும், சிற்றிலக்கணமும் நிகண்டும் கணக்குங் கற்பித்த நடுத்தரக் கல்வியாசிரியர்க்குக் கணக்காயர் என்றும், ஐந்திலக்கணமும் அவற்றிற்குரிய இலக்கிய முங் கற்பித்த மேற்றரக் கல்வியாசிரியர்க்கு ஆசிரியர் என்றும் பெயர்.

ஆசிரியர், நூலாசிரியர் நுவலாசிரியர் (போதகாசிரியர்)

உரையாசிரியர் என மூவகையர்.

துவக்கக்கல்வி மாணவர்க்கும் நடுத்தரக் கல்வி மாணவர்க்கும், பள்ளிப்பிள்ளைகள் என்றும், மாணியர் என்றும் மாணவர் (மாணவகர், மாணாக்கர்) என்றும், சட்டர் என்றும் பெயர். அவருள் தலைமை யானவன் சட்டநம்பி அல்லது சட்டநம்பிப் பிள்ளை (சட்டாம்பிள்ளை) எனப்பட்டான். மேற்றரக் கல்வி மாணவர்க்கு மாணவர் என்றும் மழபுலவர் என்றும், கற்றுச்சொல்லியர் என்றும் பெயர்.

துவக்கக்கல்வி நிலையிலும் நடுத்தரக்கல்வி நிலையிலும் மாணவரின் பெற்றோரும், மேற்றரக் கல்வி நிலையில் மாணவரும், ஆசிரியர்க்குச் சம்பளம் இறுத்து அவரைப் போற்றி வந்தனர். ஏழையாயிருந்து ஆசிரியனுக்குத் தொண்டு செய்யும் மாணவனுக்கு முத்தரக் கல்வியும் இலவசமாய்க் கற்பிக்கப்பட்டது.

சிறப்புக் கல்வி: மாணவர் பொதுக்கல்வி கற்றபின், இசை நாடகம் கணியம் மருத்துவம் முதலிய சிறப்புக் கலைகளை, அவ்வக் கலை யாசிரியர் வாயிலாய்க் கற்றனர். அக்காலத்து நூல்களெல்லாம் செய்யுள் வடிவிலிருந்தமையின் எவ்வகை நூற்கல்விக்கும் சிறந்த இலக்கணக் கல்வி இன்றியமையாததாயிருந்தது.