உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலையுங் கல்வியும்

107

பொருள் கொடுப்போர்க்கும் பணிவிடை செய்வோர்க்கும் கலைப் பயிற்சி யளிக்கப்பட்டது.

மெய்ந்நூற் கல்வி: பொதுக்கல்வி கற்றபின், அல்லது பொதுக்கல்வியுஞ் சிறப்புக்கல்வியுங் கற்றபின், மெய்ப்பொருளறிவு பெற விரும்பினவர், காட்டகத்துள்ள முனிவரிடம் அல்லது யோகியரிடம் சென்று மூவாண்டு மெய்ந்நூற் கல்வி கற்றதாகத் தெரிகின்றது.

"வேண்டிய கல்வி யாண்டுமூன் றிறவாது" என்பது தொல்காப்பியம்.

(1134)

செய்யுளியற்றும் திறம்: எண்ணும் எழுத்தும் தவிர எவ்வகைக் கல்வியும் செய்யுள் வாயிலாகவே கற்றமையாலும், இளமையி லிருந்து செய்யுள் செய்தும் செய்யுளிற் பேசியும் பயின்றமையாலும், பண்டைப் புலவரெல்லாம் செய்யுளியற்றுந் திறம் சிறக்கப் பெற்றிருந்தனர்.

அரசர் தமிழை வளர்த்தலும் புலவரைப் போற்றலும்: பாண்டியர் தொன்றுதொட்டுக் கி.பி. 2ஆம் நூற்றாண்டுவரை கழகம் (சங்கம்) இருத்தி, நூல்நிலையம் போற்றி,' முதுநூலாராய்ச்சியும் புதுநூலாக்கமும் நிகழ்வித்து, முத்தமிழை வளர்த்து வந்தனர். கழகங் குலைந்தபின், முத்தமிழரசரும் தத்தம் அவையில் ஓரிரு சிறந்த புலவரை யமர்த்திப் போற்றி வந்தனர். அவைக்களப் புலவர்க்கும், நூலரங்கேறியவர்க்கும், அரசரைப் புகழ்ந்து பாடியவர்க்கும் முற்றூட்டும் சிறந்த பரிசும் அளிக்கப்பட்டன. ஆடல் பாடல் வல்லாரும் அரங்கேறி ஆயிரத்தெண் கழஞ்சுபொன் பெற்றமை முன்னரே கூறப்பட்டது. அரங்கேற்றம் அரசன் முன்னிலையிலும் அவ்வத் தமிழிற் சிறந்த அதிகாரியின் தலைமையிலும் நடைபெற் றது. அரங்கேறிய நூலாசிரியரை வெண்பட்டணிவித்து யானைமே லேற்றி நகர்வலம் வருவிப்பது வழக்கம்.

இலக்கியப் புலவரும் சமயநூற் புலவரும் சொற்போர் நிகழ்த்தி உண்மை நாட்டற்குத், தலைநகர்தொறும் பட்டிமண்டபம் என்னும் தருக்கமண்டபம் இருந்தது. புலவரிடைத் தெய்வப்புலமையையும் பிறருள்ளக் கருத்தறியும் ஆற்றலையும் வளர்த்தற்பொருட்டு, அரசர் அவ்வப்போது தம் உள்ளத்திலுள்ள கிளர்ச்சிமிக்க கருத்தைப்பற்றி அவரைப் பாடச்சொல்வதுண்டு. அங்ஙனம் பாடப்படுவது கண்ட சித்தி எனப்பட்டது. அரசருடைய உள்ளக்கருத்தை அறிவிப்பதும் ஐயுறவைத் தெளிவிப்பதுமான பாடற்குப் பொற்கிழியளிக்கப்பட்டது. இடைச்சங்க நூல் நிலையத்தில் மட்டும் எண்ணாயிரத்தெச்சம் நூலிருந்ததாக வழிமுறைச் செய்தி கூறும்.

1