உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திருப்பணிகள்

113

கைநீட்டி என்றும், பெயருண்டு!' இவர் அணுக்கத் தொண்டராவர். இவரல்லாது திருக்கைக் கோட்டி யோதுவார், தேவரடியார் (பதியிலார்), சாக்கையன், பண்டாரி, அறைகாரன், தேவகன்மிகள், மெழுக்கடிகள், திருவிளக்கிடுவார், திருமெய்க்காப்பு (திருமெய்காப் போன், திருமேனி காவல்) முதலிய எத்துணையோ வினைஞர் கோயிலைச் சேர்ந்திருந்தனர். பெருநாடு முழுதுமிருந்த திருக்கைக் கோட்டி யோதுவார்க்குத் தேவார நாயகம் என்றொரு தலைவ னிருந்ததாகத் தெரிகின்றது.

இறையிலி (தேவதானம்), நன்கொடை, நேர்த்திக்கடன், காணிக்கை, வரி, தண்டம், பறிமுதல் ஆகிய எழுவகையில் கோயிற்கு வருமானம் வந்துகொண்டிருந்தது.

கோயிற் செலவிற்கெல்லாம் பொதுப்பட விடப்பட்டிருந்த இறையிலியுடன், வெவ்வேறு செலவிற்குத் தனித்தனி அவ்வப்போது அரசராலும் பெருமக்களாலும் விடப்பட்டு வந்த இறையிலிகளும் உள. அவை திருவிழாப்புறம், கற்றளிப்புறம், நந்தவனப்புறம், அடுக்களைப்புறம், அவலமுதுப்புறம், அக்காரவடிசி லமுதுப்புறம், மெழுக்கடிப்புறம், திருவனந்தற் கட்டளை முதலியன. கோயிற் பணியாளர்க்குப் பகிரப்படும் திருச்சோற்றிற்காக விடப்படும் கட்டளை அட்டிற்பேறு எனப்பட்டது. ஒருவர் சிறிதுகாலம் நுகர்ந்தபின் கோயிற்கு விடுமாறு அளிக்கப்படும் நிலத்திற்கு இறைக் கட்டளை என்று பெயர்.

கோயிலில் விளக்கேற்றுவதற்கும் பிற திருப்பணிக்கட்கும் பார்ப்பனரை உண்பிப்பதற்கும், வேறு வேறாக, அரசராலும் பெரு மக்களாலும், பொதுமக்களாலும் கோயிலில் நிதிகளும் தொகை களும் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அவற்றின் வட்டியைக் கொண்டே அப் பணிகள் செய்யப்பட்டு வந்தமையின், அம் முதல்கள் அழியா திருந்தன. வட்டி பொலிசை எனப்பட்டது. தாம் குறித்த திருப்பணி களும் அறங்களும் நாள்தோறும் அல்லது நிலையாக நடைபெறற் பொருட்டு, அவற்றைப் பொலிசையைக் கொண்டே நடத்தவேண்டு மென்று, கொடையாளரே குறித்துவிடுவது மரபு.

பறிமுதலான குற்றவாளிகளின் சொத்துகள் கோயிற்கு விற்கப்பட்டு, அரசிறை நிலுவைபோக எஞ்சிய தெல்லாம், கோயிலொடு சேர்க்கப்பட்டது.

கோயில் வருமானத்தில் செலவுபோக எச்சமெல்லாம் அறமுங் கல்வியுமாகிய பொதுநலப் பணிக்குச்

செலவிடப்பட்டது.

1. உவச்சன் (ஓச்சன்) என்பது காளிகோயிற் பூசாரியின் பெயர். குருக்கள், பண்டாரம், புலவன் என்றும் பூசாரிக்குப் பெயருண்டு.