உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




118

பழந்தமிழாட்சி

(3) வெற்றி விழா: அரசன் போரில் பெற்ற வெற்றியைத் தன்னகரிலாயினும், மாற்றான் நகரிலாயினும், ஈரிடத்துமாயினும், கொண்டாடுவது வெற்றிவிழாவாகும். இதையொட்டி, அம்பலம் பொன்வேய்தல் திருவீதியமைத்தல் முதலிய திருப்பணிகளும், துலாபாரம் இரணிய கருப்பம் முதலிய தானங்களும் செய்வது வழக்கம்.

(4) மகப்பேற்று விழா: அரசனுக்குப் பிள்ளை பிறந்தபோது கொண்டாடப்படும் விழா மகப்பேற்று விழாவாகும். பெண் மகப் பேற்றினும் ஆண் மகப்பேறும், ஆண் மகப்பேற்றினும் பட்டத்திற் குரிய முதன் மகற்பேறும் சிறப்பாகக் கொண்டாடப்பெறும்.

(5) அரங்கேற்று விழா: முத்தமிழும் ஓரிரு தமிழும்பற்றி நூலியற்றிய ஆசிரியர்,அரங்கேற்றியதைக் கொண்டாடும் விழா அரங்கேற்று விழாவாகும்.

(6) நடுகல் விழா: போரில் பட்ட சிறந்த மறவர்க்குக் கல்நடும் விழா நடுகல்விழா வாகும்.

(7) பத்தினி விழா: சிறந்த பத்தினிப் பெண்ணுக்கு, அவள் இறந்தபின் கல் அல்லது சிலை நாட்டும் விழா பத்தினி விழாவாகும்.

இனி, சிறப்பாவன : பஃறுளி நெடியோன் எடுத்த முந்நீர் விழாவும், முசுகுந்தனும் நெடுமுடிக்கிள்ளிவரைப்பட்ட அவன் வழியினரும் கொண்டாடிய இந்திர விழாவும் முதலாம் இராசராசன் பிறந்த நாளிற் கொண்டாடப்பட்ட சதயத் திருவிழாவும் போன்றவை சிறப்பு விழாவாகும்.