உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




5

அரசச் சின்னங்கள்

அரசர்க்கு அவர் தகுதிக்கேற்பப் பல அடையாளங்கள் உள. அவை அரசச் சின்னங்கள் எனப்பெறும். அவை குலம், பெயர்,முடி, கோல், மாலை, கட்டில், குடை, கொடி, முத்திரை. முரசு, கடிமரம், குதிரை, யானை, தேர், மனை எனப் பதினைந்து வகைய. இவற்றுள் முடியொன்றும் மூவேந்தர்க்குச் சிறப்பு என்றும், பிறவெல்லாம் முத்திறவரசர்க்கும் பொதுவென்றும் கூறுவது மரபு.

(1) குலம் : மூவேந்தரும், கதிரவன் திங்கள் நெருப்பு ஆகிய முச்சுடரைத் தங்குல முதலாகக் கூறி வந்தனர். பாண்டியர் திங்கட்குலம்; சோழர் கதிரவக்குலம்; சேரர் நெருப்புக்குலம்.'

(2) பெயர்: அரசர் பெயர்கள், குடிப்பெயர், இயற்பெயர், பட்டப்பெயர், விருதுப்பெயர், சிறப்புப் பெயர், உயர்வுப் பெயர், வரிசைப்பெயர், திணைநிலைப் பெயர், இயனிலைப் பெயர் என ஒன்பான் வகைப்படும்.

மூவேந்தர் குடிப்பெயர்கள் பலப்பல. அவற்றுள் முதன்மை யானவை, சேரன் (சேரல், சேரலன்) சோழன் பாண்டியன் என்பன.பிற குடிப்பெயர்கள்: சேரனுக்கு மலையன் (மலைநாடன் பொறையன்), வானவன் (வானவரம்பன்), வில்லன், கோதை, உதியன், குடவன், குட்டுவன், கொங்கன், பூழியன் என்பவும்; சோழனுக்குச் சென்னி, கிள்ளி, செம்பியன், வளவன், புனனாடன் என்பவும், பாண்டியனுக்குச் செழியன், மாறன், வழுதி, மீனவன், வேம்பன்,

1 கடலுள் மூழ்கிய குமரிநாடாகிய பாண்டிநாட்டில் கதிரவன் கழிபெருங் கடுமையாய்க் காய்ந்து மக்கள் திங்களையே விரும்பும்படி செய்ததினால், பாண்டியர் தம்மைத் திங்கள் வழியினராகவும்; குணபுலமாகிய சோழநாடு கதிரவன் எழுந்திசையிலிருந்ததால், சோழர் தம்மைக் கதிரவன் வழியினராகவும் மலைநாடாகிய சேரநாட்டில் மூங்கிலும் பிறவும் ஒன்றோ டொன்றுரசி அடிக்கடி பெரு நெருப்புப் பற்றியதால், சேரர் தம்மை நெருப்பு வழியினராகவும் கூறிக் கொண்டதாகத் தெரிகின்றது. குமரிநாட்டு வெப்பத்தினாலேயே, வேனில் இன்னிழல் தரும் வேம்பின் பூமாலையை, அடையாள மாலையாகவும், நீர்வாழ் மீன்வடிவை முத்திரையாகவும், பாண்டியன் கொண்டான் போலும்!