உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

பழந்தமிழாட்சி ஊரன், துறைவன், விடலை முலியன திணைநிலைப் பெயராம். இவை பெரும்பாலும் குறுநில மனனர்க்கு வழங்கும்.

இயனிலைப் பெயராவது ஏதேனும் ஓர் இயல்பற்றி வழங்கும் பெயர். செம்மல், வள்ளல் முதலியன இயனிலைப் பெயராம்.

தமிழகம் முழுவதையும் அடிப்படுத்திய பிற்காலச் சோழப் பேரரசர் 'மும்மடிச் சோழன்,' 'மும்முடிச் சோழன்,திரிபுவன தேவன்,' 'திரிபுவனச் சக்கரவர்த்தி' முதலிய கொற்றப் பெயர்களைக் கொண்டிருந்தனர். தமிழகத்தோடு பிற நாடுகளையும் வென்ற சோழ பாண்டியப் பேரரசர், 'எல்லாந்தலையான பெருமாள்”, “சகல புவனச் சக்கரவர்த்தி’, ‘இராசராசன்', 'இராசாக்கள் தம்பிரான்' முதலிய கொற்றப் பெயர் களையும்; 'எம் மண்டலமுங் கொண்ட ருளின' என்பது போன்ற கொற்ற அடைமொழிகளையும் கொண்டிருந்தனர்.

,

அரசர் போன்றே அரசியரும் பெயரால் பெருமை குறிக்கப் பெற்றனர். அரசனுடைய பட்டத்துத் தேவிக்குக் கோப்பெருந்தேவி அல்லது பெருங்கோப்பெண்டு என்பது வரிசைப் பெயராக வழங்கிற்று. ஒரே பெருநாட்டரசன் தேவிக்கு 'உலக முழுதுடை யாள்,' 'அவனி முழுதுடையாள்,' 'உலக மகாதேவி' முதலிய பெயர்களும்; முப்பெரு நாட்டுப் பேரரசன் தேவிக்கு ‘மூவுலகுடை யாள்,' 'திரிபுவன மகாதேவி' முதலிய பெயர்களும்; பல்பெரு நாட்டுப் பேரரசன் தேவிக்கு 'ஏழுலகுடையாள்' என்னும் பெயரும் கொற்றப் பெயராக வழங்கிவந்தன.

(3) முடி: முடி என்பது மகுடம். தமிழகம் முழுவதும் நிலையாக மூவேந்தர் ஆட்சிக்குட்பட்டிருந்த பழங்கால மெல்லாம், அம் மூவர்க்கே முடியணியும் உரிமையிருந்தது. பிற்காலத்தில் மூவேந்தருக் கடங்காத உள்நாட்டுச் சிற்றரசரும் முடியணிந்து கொண்டனர். முடி சூடியர் அல்லாத அரசர் பட்டங்கட்டியர் ஆவர்.

ஓர் அரசன் பிற அரசரை வென்றபின், அவர் முடிபோற் செய்த பொன்னுருக்களை மாலையாகக் கோத்து அணிந்துகொள்வதுண்டு. செங்குட்டுவனும் அவன் முன்னோரும், சோழ பாண்டியரையும் ஐம்பெரு வேளிரையும், வென்றமைக் கறிகுறியாக, ஏழுமுடி மாலையொன் றணிந்திருந்தனர்.

ஆளும். அரசனைப்போல் இளவரசனும் முடியணிந்திருந் தான். ஆயின் அரசன்முடி நீண்டு குவிந்தும், இளவரசன் முடி குட்டையாகவும் இருந்தது. அதனால், பின்னது மண்டை எனப்பட்டது.