உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




68

பழந்தமிழாட்சி மேனாட்டுப் பொருளியல் நூற்படி, நேர்வரி(Direct tax) நேரல் வரி(Indirect tax) ஆகிய இருவகை வரிகளும் அக்காலத்தில் வாங்கப் பட்டன. வரி கொடுப்பவனையே தாக்கும் வரி நேர்வரி என்றும், வரி கொடுப்பவனைத் தாக்காது வேறொருவனைத் தாக்கும் வரி நேரல் வரி என்றும் கூறப்படும். ஆள்வரி மணவரி முதலியன நேர்வரியும் விற்பனை வரி ஓடக்கூலி முதலியன நேரல் வரியும் ஆகும்.

நிலவரி: வரிகளுட் சிறந்தது நிலவரி. அதனால் அது சிறப்பாக இறை அல்லது அரசிறை எனப்படும். அதற்குச் செய்க்கடன் காணிக் கடன் என்னும் பெயர்கள் வழங்கின.

வரிவிதித்தற்கு, விளைநிலம் விளையாநிலம் என ருபாலாக ஊர்நிலங்கள் பகுத்துக்கொள்ளப்பட்டன. இவற்றுள், விளையா நிலம், ஊர்ப்பொதுநிலமும் பட்டப்பாழ் என்னும் தரிசுமாக இருபகுதிப்பட்டது. இவ்விரு பகுதியும் இறையிலி நிலமாயிருந்தன. ஊர்ப்பொது நிலங்கள்; பல்வேறு சேரிகள் உள்ளிட்ட ஊர்க் குடியிருப்பு, ஊர்க்களம், அழிந்துபோனவூராகிய நந்தப்பாழ், கடைத்தெரு, கோயில், குளங்குட்டை, மடம், சத்திரம், நந்தவனம், மந்தை, கன்றுமேய்பாழ், பெருவழி, ஓடை, ஊர்நிலத்தூடறுத்துப் போன வாய்க்கால், பாறை, ஆற்றுப்படுகை, உடைப்பு, இடுகாடு, இடுகாட்டிற்கும் சுடுகாட்டிற்கும் செல்லும் வழி முதலியனவாகும்.

விளைநிலம் நீர்நிலம், கொல்லை, காடு என மூவகையாக வகுக்கப்பட்டிருந்தது. இவை, முறையே நன்செய்யும் இறைவைப் புன்செய்யும் வானாவாரிக் காடுமாகும். நன்செய்கள் அவற்றின் விளைவிற்குத் தக்கபடி பலதரமாகப் பாகுபாடு செய்யப்பட்டிருந்தன.

நிலவரி, தீர்வை என்றும் வாரம் என்றும் இரு வகையாயி ருந்தது. இவற்றுள் முன்னது ஒரு குறிப்பிட்ட அளவும், பின்னது கண்டுமுதலில் ஒரு பகுதியுமாகும். தீர்வைக்குரிய நிலம் தீர்வைப் பற்று என்றும், வாரத்திற்குரிய நிலம் வாரப்பற்று என்றும், வாரத்தைப் பணமாகச் செலுத்தும் நிலம் கடமைப்பற்று என்றும் கூறப்பட்டன. பெரும்பாலும், அளந்து கண்டுமுதல் காணக்கூடிய கூலவெள்ளாண்மைக்கு வாரமும், அங்ஙனஞ் செய்ய இயலாத பிறவற்றிற்குத் தீர்வையும் விதிக்கப்பட்ட தாகத் தெரிகின்றது. வாரம் பொதுவாய் ஆறிலொரு பங்காயிருந்தது. இது தொன்றுதொட்டு வந்த முறையென்பது,

"தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங் கைம்புலத்தா றோம்பல் தலை"

(குறள்.)