உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




13 மறமும் போரும்

நாடுகாவல் நன்மை செய்தல் பொருதல் ஆகிய மூவகை அரச வினைகளுள், இறுதியது அரசர்க்குச் சிறந்ததாதலின், அது வினையென்னும் பொதுச்சொல்லால் விதந்து குறிக்கப் பெறுவது

மரபு.

அரசர் போர் ஆசை, பாதுகாப்பு, பகை, தண்டனை, மறம், அருள் என்னும் அறுவகைக் காரணத்தாற் பிறக்கும்.

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை, புகழாசை, விண்ணாசை என ஆசை ஐவகைப்படும். தற்காப்பு, நாட்டுக்காப்பு, மதக்காப்பு எனப் பாதுகாப்பு மூவகைப்படும். பழிதீர்ப்பு, பழம்பகை, பொறாமை எனப் பகை மூவகைப்படும். பிறவரசரின் இகழ்ச்சிபற்றியதும் திறையிறாமை பற்றியதும் படையெடுப்புப் பற்றியதும் எனத் தண்டனை மூவகைப்படும். மறம் ஒன்றே. அது கடுமறம். தன் குடிகள்மீது கொண்டதும் பிறர் குடிகள்மீது கொண்டதும் என அருள் இருவகைப்படும். இவற்றுள் முன்னது, கடல்கோள் நேர்ந்தவிடத்து வாழ் நிலமில்லாக் குடிகட்குப் பிறர் நாட்டுப் பகுதிகளை வென்று தருவது போன்றது; பின்னது, கொடுங்கோல் மன்னர் ஆட்சியினின்று அவர் குடிகளை மீட்பது போன்றது. இனி, ஓர் அரசன் இறந்தபின் நேர் பிறங்கடை யில்லாவிடத்து நிகழும் தாயப்போரும் உண்டு. அது தன்னுரிமை காப்பதாகலின் தற்காப்பின்பாற்படும்.

அரசர் தம் பகையரசர் திறந்து நடந்து கொள்ளும் முறை இன்சொல், பிரிப்பு, கூட்டு, கொடை, உடன்படிக்கை, சந்து, தண்டனை, அசைவின்மை, ஆகுலம், அரட்டு, வஞ்சனை, ஒளிவு, புகலடைவு, மற்போர், கலைப்போர் எனப் பதினைந்து திறத்தது. பிரிப்பென்பது, பகையரசரின் துணைவரை அவரினின்று, பிரித்துவிடுவது. கூட்டு என்பது, பகையரசரின் துணைவரைத் தம்மொடு கூட்டிக் கொள்வதும், பிறவரசரைத் தம்மொடு கூட்டிக் கொள்வதும் என ருவகையது. சந்து என்பது, இரு பகையரசரை மூன்றாம் அரசன் இசைத்து வைப்பது. தண்டனை என்பது, போர்.