உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மறமும் போரும்

83

அசைவின்மை யென்பது, பகையைப் பொருட்படுத்தாது வாளா விருத்தல். ஆகுலம் என்பது, ஆரவாரம். அது தொண்டைமான் ஒளவையார்க்குத் தன் படைக்கலக் கொட்டிலைக் காட்டியதும், போர்க்களத்தில் பகைவர் அஞ்சுமாறு படைகளை அணிவகுத்து நிறுத்தியதும் போன்றது. அரட்டு என்பது, நெடுமொழி அல்லது வஞ்சினம். வஞ்சனையென்பது, மறைந்திருந்து தாக்குவதும், மூவேந் தரும் பாரியையும் முத்திநாதன் மெய்ப்பொருள் நாயனாரையும் வஞ்சித்துக் கொன்றதும் போன்றது. ஒளிவு என்பது, மலையிற்போய் ஒளிந்துகொள்வது. புகலடைவு என்பது, வேற்றரசனிடம் சென்று அடைக்கலம் புகுவது. மற்போர் என்பது, படைவலியால் வெல்ல வியலாத போது மாற்றரசனை மற்போரால் வெல்வது. கலைப்போர் என்பது, ராவணன் தென்னாட்டிற் புகாதவாறு அகத்தியர் பாண்டியன் சார்பாக அவனை இசையாற் பிணித்தது போல்வது. பழங்காலத்தில், ஓர் அரசன் தன் பகைவனைப் போரில் வெல்ல முடியாவிடின், அவனை வேறொரு கலையில் வெல்வதும் சிறுபான்மை நிகழ்ந்து வந்தது. பிற வெளிப்படை.

பண்டைக்காலத்தில் போர்வினை, வெட்சி கரந்தை வஞ்சி தும்பை உழிஞை நொச்சி காஞ்சி என எழுவகைப் பட்டிருந்தது. அவ் வெழுவகையும் முறையே, வெட்சி கரந்தை முதலிய எழுவகைப் பூக்கள் அல்லது பூமாலைகள் சூடிப் பொரப்பட்டமையால், அப் பெயர் பெற்றன. வெட்சி என்பது பகைவர் அல்லது வேற்றரசர் நாட் டிலுள்ள ஆநிரைகளைக் கவர்வது. இது ஒரு நாட்டு மறவர் தாமே கவர்வதும், தம் அரசனால் ஏவப்பட்டுக் கவர்வதும், என இருவகை. இவற்றுள், முன்னது தன்னுறு தொழில் என்றும், பின்னது மன்னுறு தொழில் என்றும் கூறப்படும். கரந்தையென்பது கவரப்பட்ட ஆநிரைகளை மீட்டல். வஞ்சியென்பது, வேற்று நாட்டின்மேற் படையெடுத்துச் செல்லல். தும்பை யென்பது, ஒரு வெளி நிலத்திற் பொருதல். உழிஞை யென்பது, ஓர் அரசன் வேற்றரசன் நகரை முற்றுகையிடல். நொச்சியென்பது, முற்றுகை யிடப்பட்டவன் தன் நகரைக் காத்தல். காஞ்சியென்பது, நிலையாமை விளங்கித் தோன்றும்படி எண்ணிறந்தவர் விரைந்து படுமாறு இருபடைகளும் ஊன்றிப் பொருதல்.

போர் செய்தற்கு, அரசன் நாட் பார்த்தலும் அவனுடைய மறவர் குறிபார்த்தலும் மரபு. அரசன் பெருங் கணியை வினவி நல்ல நாட்குறித்து, அதில் படையொடு போருக்குப் புறப்பட வசதியில்லா விடின், அன்று தன் குடையையும் வாளையும் கோட்டை வாயிலுக்கு வெளியே போக்கி வைப்பது வழக்கம். இது குடைநாட்கோள் என்றும், வாள் நாட்கோள் என்றும் கூறப்படும். சிறுபான்மை முரசையும் இங்ஙனம் போக்கி வைப்பதுண்டு. பொதுவாக, போருக்குப் பரணிநாள் சிறந்ததாகக் கொள்ளப்படும்.