உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

பழந்தமிழாட்சி

மறவர் குறிபார்த்தல் வாய்ப்புள், உன்னம், புள், விரிச்சி என நால்வகைப்படும். வாய்ப்புள் என்பது, தற்செயலாகப் பிறர் வாயினின்று கேட்கப்பெறும் மங்கலச் சொல் அல்லது நற்சொல். உன்னம் என்பது, ஒரு குறிப்பிட்ட உன்னமரம் தழைத்துவரின் தம் அரசனுக்கு வெற்றி யென்றும், அது பட்டுப்போயின் அவனுக்குத் தோல்வி யென்றும் படை மறவர் குறித்துக்கொள்ளுதல். புள் என்பது, ஆந்தை கூகை முதலிய பறவைகள் ஒலிக்குந் தரமும் காகம் வல்லூறு முதலிய பறவைகள் பறக்குந் திசையும்பற்றிக் குறித்துக்கொள்ளும் நிமித்தம். விரிச்சி யென்பது, போர்மறவர் போய்த் தங்கி யிருக்குமிடத்தில் நள்ளிரவில் ஓர்த்துக்கேட்கும் வானச்சொல்.

அரசர் தம் மகப்பேற்றுக் காலத்தில் பொதுவாய்ப் போருக்குச் செல்வதில்லை.

போருக்குச் செல்வதற்கு இரண்டொரு நாட்கு முன்பு, வள்ளுவன் யானை மீதேறி முரசறைந்து அதைப்பற்றித் தலை நகரத்தார்க்கு அறிவிப்பான். போருக்குப் புறப்படுமுன் அரசன் படைமறவரை ஊக்குவித்தற் பொருட்டு அவர்க்கு ஒரு சிறந்த விருந் தளிப்பது வழக்கம். அது பெருஞ்சோற்றுநிலை எனப்படும். அதன் பின் போர் மறவர்க்கு அடையாளப்பூவும் போர்ப்பூவூம் படைக் கலங்களும் அரசனால் வழங்கப்பெறும். படைத் தலைவர்க்கும், சிறந்த மறவர்க்கும் இயற்கைப் பூவிற்குப் பதிலாகப் பொற்பூ அளிக்கப்பெறுவதுமுண்டு.

அரசன் தானும் போருக்குச் செல்வதுமுண்டு; செல்லாமையு முண்டு; செல்வதே பெரும்பான்மை, அரசன் தனக்கு வெற்றியென்று முழுவுறுதியாயிருப்பின், பகைவர் நாட்டைக் கைப்பற்றுமுன்னரே, அதைத் தன் இரவலர்க்கும் படைத் தலைவர்க்கும் பங்கிட்டுக் கொடுத்துவிடுவதும் ஒரோவிடத் துண்டு. அது ‘கொள்ளார் தேஎங் குறித்த கொற்றம்' எனப்படும். (தொல். 1013)

போருக்குப் புறப்படும் அன்று போர்முரசுகள் முழுக்கப் பெறும். போர்மறவர், குளித்து வட்டுடையணிந்து படைக்கலந் தாங்கிப் பூச்சூடி அணிவகுத்து, கொற்றவைக்கு நரபலியிட்டு, நெடு மொழியும் வஞ்சினமுங் கூறி யாரவாரித்து, நகருக்கு வலமாகப் புறப் பட்டுச் செல்வர். பொன்னுலகப் பேற்றை விரும்பும் சில மறவர் பொற்றகட்டை வாயிலிட்டுக் கொள்வதுண்டென்பது, சிந்தாமணி யால் தெரிய வருகின்றது (778). போர்ப்படைகள் பகை நாட்டூடு செல்லும்போது கொள்ளையடித்துச் செல்வது வழக்கம்.