உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

திரவிடத் தாய் யெழுத்துகளையும் இலக்கணத்தையும் வகுத்துச் சரித்திரத்தை மாற்றி, திரவிட நாகரிகத்தை ஆரிய நாகரிகமாகக் காட்டி, வடமொழியையே திரவிடத்தாயென்று கருதும்படி செய்து விட்டனர். தமிழரல்-திரவிடரும்

மொழித் தொடர்பை உயர்வாகவும் தமிழத் தொடர்பை இழிவாகவும் கருதி, ஆரியச் சார்பில்லாத தமிழையும் தமிழரையும் பழிக்கின்றனர். இது, மூக்கறையன் பிறரையும் மூக்கறுக்கச் சொன்ன கதையேயன்றி வேறன்று.

9. திரவிட மொழிகளெல்லாம் சேர்ந்ததே முழுத்திரவிடம்

மொழிகள் வழங்குவது வாயினால். பல சொற்கள் சேர்ந்தே மொழி. சொற்களை ஒவ்வொன்றாய் வழங்காதுவிட்டால் பின்பு மொழியும் வழக்கற்றொழியும். எழுத்து வடிவிலிருப்பது மட்டும் மொழிவழக்கன்று. கோதியம் (Gothic), இலத்தீன், சமற்கிருதம், முதலிய வழக்கற்ற மொழிகளெல்லாம் எழுத்து வடிவில் இன்னுமுள. ஆரியச் சொற்களைத் தேவையின்றிக் கலந்ததினால் அவற்றின் நிலையிலிருந்த திரவிடச் சொற்களெல்லாம் வழக்கிறந்தும் மறைந்தும் போய்விட்டன. இலக்கியமுள்ள மொழியானால் வழக்கற்ற சொற்கள் இலக்கியத்திற் போற்றப்பட்டிருக்கும். அஃதில்லாததாயின் மீட்பற இறந்தொழியும். வருஷம், வார்த்தை, வியாதி, வீரன், வேதம், வைத்தியம் முதலிய வடசொற்கள் முறையே ஆண்டு, சொல், நோய், மறவன் அல்லது மழவன், மறை, மருத்துவம் அல்லது பண்டுவம் முதலிய தென்சொற்களை வழக்கு வீழ்த்தியுள்ளன. இலக்கியமில்லாத வடநாட்டுத்திரவிட மொழிகளோ, ஆரியச் சொற் கலப்பால் திரிந்தும் மறைந்தும் வருகின்றன. கோண்டி (Gondi), பத்ரீ (Bhatri), மால்ற்றோ (Malto), போய் (Bhoi) முதலிய திரவிட மொழிகள் மெள்ள மெள்ள ஆரிய மயமாவதை அல்லது மறைந்து போவதைப் பண்டிதர் கிரையர்சன் 1906ஆம் ஆண்டே தமது 'இந்திய மொழியியல் அளவீடு' என்னும் நூலிற் கூறியுள்ளார். தமிழை ஆரியத்தினின்று விலக்காவிட்டால், சிறிது சிறிதாய்த் தெற்கே தள்ளிப்போய் இறுதியில் தென்மொழி தென்புலத்தார் மொழியாகிவிடும். இதுவே ஆரியர் விரும்புவது.

செந்தமிழும் கொடுந்தமிழும் சேர்ந்ததே தமிழாதலானும், தமிழல் - திரவிட மொழிகளெல்லாம் பழைய கொடுந்தமிழ்களே யாதலானும், திரவிடரெல்லாம் ஒரு குலத்தாரேயாதலானும், ஆரியக்