உயர்வுபற்றி வந்தது. ஏதின்மை இங்கு ஏதும் அன்பின்மை. கெழி நட்பு. "ஒருவன் கெழியின்மை கேட்டா லறிக" என்பது நான்மணிக்கடிகை (63). கெழீஇ. என்பது கெழி என்பதன் அளபெடை வடிவம். பகைவனைக் கெழீஇ யிலி என்பது இலக்கிய வழக்கு (தொல். சொல். 57, இளம். உரை). 'பெருங் கெழீஇ நட்பு' என்பது பேருழுவலன்பு என்பது போன்ற பல்சொற்றொடர். "பெருங்கழி நட்பென்று பாடமோதுவாரு முளர்" என்றார் பரிமேலழகர். அது பெருங்கெழி நட்பு என்று மிருந்திருக்கலாம். "கெழீஇய வென்பதனிறுதி நிலை விகாரத்தாற் றொக்கது" என்று கொள்ளத் தேவையில்லை.
817. நகைவகைய ராகிய நட்பிற் பகைவராற்
பத்தடுத்த கோடி யுறும்.
(இ-ரை.) நகை வகையர் ஆகிய நட்பின் - தாம் அறிவடையும் வகை யினராகாது சிரித்து மகிழும் வகையினராதற்கு ஏதுவாகிய நட்பால் வரும் இன்பத்தினும்; பகைவரால் பத்து அடுத்த கோடி உறும் - பகைவரால் வருந் துன்பம் பத்துக்கோடி மடங்கு நல்லதாம்.
நகைவகைய ராக்குவார் பிறருக்கு அறிவூட்டாது அவரைச் சிரித்து மகிழவைப்பதையே தொழிலாகக் கொண்டு பொருள்பெறும் குறும்பர், காமுகர், நகைவேழம்பர் (கோமாளிக் கூத்தர்) முதலியோர். அவர் நட்பு மிகத் தீயது என்பது கருத்து. 'பத்தடுத்த கோடி யுறும்' என்பது வலியுறுத்தல் பற்றிவந்த உயர்வுநவிற்சி. ஆகிய நட்பு ஆதற்கேதுவான நட்பு. 'நட்பு' ஆகுபொருளி. 'வருந்துன்பம்' என்பது அவா-நிலையால் வந்தது.
818. ஒல்லுங் கரும முடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.
(இ-ரை.) ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை - ஆகும் செயலை யும் ஆகாததாக்கிக் கெடுப்பவரின் நட்பை; சொல்லாடார் சோர விடல் - அவருக்குச் சொல்லாமலே மெல்ல மெல்லத் தளரவிடுக.
இனி, 'ஒல்லும் கருமம் உடற்றுபவர்' என்பதற்கு, தம்மால் இயலுங் கருமத்தையும் இயலாததாகக் காட்டி நடிப்பவர் என்று உரைப்பினுமாம். சோரவிடலைத் தெரிவிப்பின் ஏதேனுஞ் சூழ்ச்சி செ-து அதைத் தடுப்ப ராதலின், 'சொல்லாடார்' என்றும், நீண்ட காலத்தின்பின் தாமே அறிந்து கொள்ளுமாறு மெல்ல மெல்லத் தளரவிடுக என்பார். 'சோர விடல்' என்றும், கூறினார். 'சொல்லாடார்' எதிர்மறை முற்றெச்சம். எச்சவும்மை தொக்கது.