108
திருக்குறள்
தமிழ் மரபுரை
இனநலமும் கல்விநலமும் மிகப் பெற்றவிடத்தும் தீய பிறவிக்குணம் நீங்காதவர் உலகிலிருத்தலால், 'மனநல்ல ராகுதல் மாணார்க் கரிது' என்றார்.
824. முகத்தி னினிய நகாஅ வகத்தின்னா
வஞ்சரை யஞ்சப் படும்.
(இ-ரை.) முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா வஞ்சரை - காணும் போதெல்லாம் முகத்தில் இனிதாகச் சிரித்து உள்ளத்தில் எப்போதும் தீயவராகிய வஞ்சகருக்கு; அஞ்சப்படும் - அஞ்சி விலகிக் கொள்ளல் வேண்டும்.
சிரிப்பின் மகிழ்ச்சிபற்றி இனிய என்றும், அகத்திற் பகையிருக்கவும் புறத்தில் நட்புக்காட்டலின் 'வஞ்சர்' என்றும், பகையைக் குறிப்பாற் காட்டக் கூடிய முகமும் அதை அறிய முடியாவாறு மலர்ச்சி கொள்ளுதலின், 'அஞ்சப்படும்' என்றும் கூறினார். நகும் நேரங்களின் பன்மைபற்றி 'இனிய' என்று பன்மையிற் குறித்தார்.
825. மனத்தி னமையா தவரை யெனைத்தொன்றுஞ்
சொல்லினாற் றேறற்பாற் றன்று.
(இ-ரை.) மனத்தின் அமையாதவரை - உள்ளத்தால் தம்மோடு பொருந்தாதவரை; எனைத்து ஒன்றும் - எத்தகைய வினையிலும்; சொல்லினால் தேறற்பாற்று அன்று - அவர் சொல்லைக்கொண்டு அவரை நம்பத்தக்க முறைமைத்தன்று, அரசியல் நூல்.
எனைத்தொன்றும் என்பதற்கு, எத்துணைச் சிற்றளவும் என்று உரைப்பினும் அமையும். அன்மைச் சொல் அரசியல் நூல் என்பதை அவாவி நின்றது. பகைமையை மறைத்துச் சொல்லும் வஞ்சனைச் சொல்லை மெ-யென்று கொண்டு, அவரை எவ்வினைக்கும் நம்புவது அரசியல் நூல் முறைமையன் றென்பதாம்.
826. நட்டார்போ னல்லவை சொல்லினு மொட்டார்சொ
லொல்லை யுணரப் படும்.
(இ-ரை.) நட்டார்போல் நல்லவை சொல்லினும் - உண்மை நண்பர் போல் நன்மை பயக்கக் கூடியவற்றைச் சொன்னாரேனும்; ஒட்டார் சொல் ஒல்லை உணரப்படும் - பகைவர் சொற்கள் நன்மை பயவாமை விரைந்து அறியப்படும்.