(தொல். கிளவி. 51)
வழுவன்மையானும், 'மற்றை யுயர்திணைப் பொருள்களோடுஞ் சேர்தற் றொழிலோடும் இயையாமையின், விளையுளென்பது உழவர் மேனின்றது" என்று பரிமேலழகர் கூறுவது பொருந்தாது. தக்காராவார் புலவரும் அடியாரும் முனிவரும். தாழ்விலாச் செல்வரென்றது காலினுங்கலத்தினும் பொருளீட்டும் இருவகை வணிகரை, செல்வத்திற்குத் தாழ்வின்மை வழங்கத் தொலையாமையும் வருவா - குன்றாமையும் பல்துறைப் பட்டிருத்தலும். செங்கோலரசனோடும் சிறந்த அமைச்சனோடும் என்பது பாலால் வந்தது. ஆகவே, அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும் நால்வகுப்பாராலும் விளையும் அறிவு காவல் செல்வம் உணவு ஆகிய நால்வகைப் பொருளும் சிறந்தது நன்னாடு என்பதாம்.
732. பெரும்பொருளாற் பெட்டக்க தாகி யருங்கேட்டா
லாற்ற விளைவது நாடு.
(இ-ரை.) பெரும்பொருளால் பெள்தக்கது ஆகி - பல்வகைப் பொருள் வளமிகுதியாற் பிற நாட்டாராலும் விரும்பப்படுவதா-; அருங்கேட்டால் கேடில்லாமையோடுகூடி; ஆற்ற விளைவது நாடு - நானிலச் செல்வமும் மிகுதியாக விளைவதே வறுமை யில்லாத நாடாவது.
பெருமை பொருளின் அளவையும் வகைகளையும் தழுவிநின்றது. கேடாவன் மிகுமழை, மழையின்மை, எலி, விட்டில், கிளி, பகையரசண்மை என ஆறென்றும்; விட்டில், கிளி, யானை, காட்டுப்பன்றி, தொட்டியர், கள்வர், பெரும்புயல் என ஏழென்றும்; விட்டில், கிளி, யானை, தன்னரசு (Autocracy), வேற்றரசு, மழையின்மை, கடுமழை, கடுங்காற்று என எட்டென்றும் மூவகையிற் சொல்லப்படும்.
"மிக்கபெய லோடுபெய லின்மையெலி விட்டில்கிளி
யக்கணர சண்மையோ டாறு.
"விட்டில் கிளியே நால்வா யேனம்
தொட்டியர் கள்வர் சோனைப் பெரும்புயல்
(பிங்.3:7)
"விட்டில் கிளிநால்வா- தன்னரசு வேற்றரசு
நட்டம் கடும்புனல்கா லெட்டு."