உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




156

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

தெரிதரு தேற்றம். இந்தியால் தமிழ் கெடாதென்று இந்தி வெறியரும் தமிழ்ப் பகைவரும் மொழியறிவிலிகளும் சொல்வது பொருளற்றது.

இனி, இந்தியால் நேரும் எல்லாத் தீங்குகளுள்ளும் மிகக் கேடானது, இந்தியாரல்லாதார் எல்லாரும் இரண்டாந்தரக் குடிவாண ராகுவதே. இந்தியார் இந்தியாவை ஆண்ட ஆங்கிலர் போலும், ஏனையர் இந்தியர் போலும் இருப்பர்.

7. மும்மொழித் திட்டம்

ஐம்பது மொழிகள்வரை கற்கும் ஆற்றலுள்ள மக்களும் ஒரோவொருவர் இருப்பினும், மக்களின் சராசரியாற்றல் இருமொழியே கற்றற் குரியதாகும். கற்கும் மொழிகள் பல்கப் பல்க மொழிப் புலமைத்திறம் குன்றும்; பிற பாடங்களைப் படிக்கும் காலமுங் குன்றும்.

மொழிகள் கொள்கலமும், அவற்றின் இலக்கியம் உள்ள டக்கமும் போன்றவை. உள்ளடக்கமின்றிக் கொள்கலங் களையே பெருக்கிக் கொண்டுபோவது, உயிர்வாழ்க்கைக்குப் பயன்படு வதன்று.

உள்ளடக்கமும் பலதிறப்பட்டது. அறிவியல் கம்மிய இலக்கிய முள்ள மொழி உயிர்நாடி யுணவுப்பொருள் செறிந்த தகரம் போன்றது; பண்டை நாகரிக இலக்கியம் மட்டும் நிறைந்தது நெல்லுங் கோதுமையும் நிறைந்த தகரம் போன்றது; அதுவு மில்லாதது வெறுந்தகரம் அல்லது உமித்தகரம் போன்றது.

"கல்வி கரையில கற்பவர் நாட்சில

மெல்ல நினைக்கிற் பிணிபல தெள்ளிதின் ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து."

(நாலடி.135)

இக்காலக் கல்வியெல்லாம் பெரும்பாலும் அறிவியலுங் கம்மியமுமே. அவற்றைக் கற்க மிகுந்த காலம் வேண்டும். இந்தி ஆங்கிலம்போற் பயன்படுவதன்று.

வடஇந்தியர்க்கு மும்மொழிக் கல்வியிற் பற்றில்லை. தென்னிந்திய மொழி இக்காலத்திற்குப் பயன்படா தென்று அவர்க்குத் தெளிவாகத் தெரிவதால், அதைக் கற்க அவர் விரும்புவதில்லை. அங்ஙனமே, வடஇந்திய மொழியும் தென்னிந்தியர்க்குப் பயன்படாமையால், அதைக் கல்லாது விட்டுவிடல் வேண்டும்.