உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வள்ளுவர் கூட்டுடைமை

கல்வி

55

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் எல்லா மாணவர்க்கும் இடமில்லை. கல்லூரிகளில் இடங்கிடைப்பினும் விரும்பிய பாட வகுப்பிற் கிடைப்பதில்லை. கலைக்கல்லூரி மாணவரிடம் நன்கொடையும் அலுவற்கல்லூரி மாணவரிடம் பெருங்கை யூட்டும் வாங்குவது வழக்கமாய்ப் போயிற்று.

பல கல்வி நிலையங்களில் நூலகமும் ஆய்வுக்களமும் (laboratory) பெயரளவிலேயேயுள்ளன.

மாணவர் மிகுதியினால், கட்டொழுங்கு (discipline) கெடு வதுடன் கல்வித்திறமுங் குறைகின்றது. நாளடைவில், தேர்வே வேண்டாமென்றும் அல்லது தேர்வெழுதினவர்க் கெல்லாம் தகுதித்தாள் கொடுக்க வேண்டுமென்றும், மாணவர் கிளர்ச்சி செய்யினுஞ் செய்வர்.

கைத்தொழில்

மூலக்கருவிப் பொருள்கள் கிடையாமையால், பல செய் பொருள்கள் அவற்றிற்குரிய அல்லது சிறந்த கருவிகளாற் செய்யப்படுவதில்லை. வெண்கலத்தினாற் செய்ய வேண்டியவை பித்தளையினாலும், பித்தளையினாற் செய்யவேண்டியவை துத்தநாகத்தினாலும், செம்பினாற் செய்யவேண்டியவை

இரும்பினாலும், இரும்பினாற் செய்யவேண்டியவை மரத்தி னாலும், மரத்தினாற் செய்ய வேண்டியவை சுதை மாவினாலும் (cement), மாழையினாலும் (metal) மரத்தினாலும் செய்ய வேண்டி யவை வார்ப்பனாலும் (plastic) செய்யப்பட்டு வருகின்றன.

நான்மடங்கு விலையேறியுள்ள காடிரசு(godrej) நிலைப் பேழை (almirah) அரைமடங்கு திண்ணங் குறைந்துள்ளது.

திண்ணிய அட்டைப் பெட்டிகளுள் இடப்பட்டு வந்த பல செய்பொருள்கள், இன்று சன்னத்தாளிற் சுற்றிவருகின்றன.

பொத்தகங்கள், செய்தித்தாள்கள், நாளேடுகள்(calendars) முதலியவற்றிற்குப் போதிய அல்லது நல்ல தாள் கிடைப்பதில்லை.

மலையிலுள்ள மரங்கள் பல வெட்டப்பட்டுவிட்டதனால், இனி நாட்டுமரமுங் கிடையாமல், நாற்காலி, மொட்டான் (stool), நிலைமேடை (மேசை), அறுகாலி (bench) முதலிய இருக்கை களெல்லாம் கல்லாலேயே செய்யவேண்டிய கற்காலம் மீளினும் மீளும்.