உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




76

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

இந் நூற்றாண்டுத் தொடக்கத்தில், துமுக்கி (gun) செய்யக் கூடிய ஒரு கொல்லர் ஆம்பூர் வட்டச் சாணாங் குப்பத்திலும், இந் நூற்றாண்டு நடுவில் அலிகார் பூட்டினுங் காடிரசு (godrej) பூட்டினுஞ் சிறந்தது செய்யக் கூடிய ஒரு கொல்லர் மன்னார் குடியிலும் இருந்தனர்.

இங்ஙனம் ஆற்றல்பெற்று ஆங்காங்கிருப்பவரையெல் லாம், அரசு தேடிக் கண்டுபிடித்து மேனாடுகளிற் பொறியாக்கப் பயிற்சிக் கனுப்புவது சாலச் சிறந்ததாகும்.

பொறிவினையால் மக்கட்கு மட்டுமன்றி மாடு, கழுதை, குதிரை, கோவேறு கழுதை, ஒட்டகம், யானை முதலிய விலங்கு கட்கும் நன்மையுண்டாகின்றது. இயற்கையாகக் காட்டில் முழுவுரிமையுடன் மகிழ்ந்துலவித் திரியும் விலங்குகளைப் பிடித்துச் சிறைப்படுத்தி, இரவும் பகலும் வேலைவாங்கி, விடுமுறையும் விடுதலையுமின்றி, வாழ்நாள் முழுதும் வருத்து வதால் அவற்றிற்கு ஏற்படக்கூடிய மன நிலையை, நாள்தோறும் கடுமையாயுழைத்து டவுணவையுண்ணும் வாழ்நாட் கடுஞ்சிறையாளிதான் உணர முடியும்.

அவற்றிற்கு வாயுமில்லை; ஒன்றுகூட வழியுமில்லை. யானை தவிர ஏனையவற்றிற்குக் கொடுமையை எதிர்க்கும் வலியுமில்லை.

இந்தியா மதங்கட்கும் அருளறத்திற்கும் உலகப் புகழ் பெற்றது. பல விலங்குகள் அல்லது அவற்றின் வடிவங்கள் தெய்வமாக இந்தியரால் வணங்கவும்படுகின்றன. ஆவின் நல் வாழ் வொன்றையே குறிக்கோளாகக் கொண்ட ஒரு கூட்டமு முள்ளது. ஆயினும், சில விலங்குகள் படும்பாடும் கெடுங்கேடும் நீங்க வழியில்லை.

மேனாட்டார், அருள்பூண்டு செய்யாவிடினும், பொறி வினையால் இழுவை விலங்குகட்கும் சுமை விலங்குகட்கும் செய்துள்ள நிலையான விடுதலை, அளவிடுந் தரத்ததன்று.

இந்தியாவில் அவற்றின் இனம் இருக்கும் நிலைமையை யுணர்த்த, அவற்றின் கழுத்துப் புண்ணும் விலாவெலும்புத் தோற்றமும் போதும்.

3. வாணிகத்தை வளர்த்தல்

பொருள் விலையேற்றம், பெரும்பாலும் மொத்தவிலைஞர் பதுக்கத்தாலும் கொள்ளையடிப்பாலும் கள்ள விற்பனையா லுமே நேர்கின்றது. பொதுவாக போர், விளையாமை, மழை