உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் கடமை

77

பெய்யாமை, வெளிநாட்டினின்று வரத்துக் குறைவு, போட்டி யின்மை முதலிய சமையங்களை இதற்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இத்தகைய சமையங்களில் அரசு விழிப்பா யிருந்து அவர்மேல் ஒரு கண்வைத்துத் தவறுகண்டு தண்டிப்ப துடன், கூட்டுறவு விற்பனை நிலையங்களையும் நேர்மைவிலைக் கடைகளையும் நாடுமுழுதும் நிறுவுதல் வேண்டும்.

அரசு வரவுசெலவுத் திட்டம் வகுக்கும்போது சில பொருளினங்கள் மீது வரி மிகுத்தலும், பொருளின் விலை யேற்றத்திற்குக் கரணியமாகும். வெள்ளிரும்புத் (Stainless steel) தகட்டின்மீது நடுவணரசு வரி மிகுத்திருப்பது நன்றன்று.

ஒரு பொருளை விற்பவன் அதன் கொள்விலைமேல் ஊதியம் (gain) வைத்தே விற்பான். ஆதலால், ஒரு பொருளின் விலைகுறைப்பு முயற்சியை, அது விளையும் அல்லது செய்யப் படும் இடத்திலேயே தொடங்குதல் வேண்டும். ஆகவே, விளைப் பான், விற்பான், அரசு ஆகிய மூவரும் சேர்ந்தே, பொருள் விலையிறக்கப் புதிரை விடுத்தல் வேண்டும்.

உரம், கருவி, வரி, பணியாட்கூலி என்னும் நால்வகைச் செலவோடு தன் குடும்ப வாழ்க்கைச் செலவையுஞ் சேர்த்தே, உழவன் தன் விளைப்பிற்கு விலை குறிப்பான். அது அளவிற்கு மிகாவாறு அரசு கவனித்தல் வேண்டும். விளைப்பானுக்கும் விற்பானுக்கும் டையில் மொத்த விலைஞன் அல்லது அரசு தவிர வேறோர் இடைஞனும் இருத்தல் கூடாது.

அரத்தி (apple) போன்று வரவர விளைவு மிகுந்துவரும் ஒருசில பண்டங்கள் தவிர, ஏனைப் பொருள்களெல்லாம் பெரும்பாலும் ஒரே விழுக்காட்டளவிலேயே விலையேறி வருகின்றன. இந்நூற்றாண்டின் தொடக்க நிலைமையை அலகாகக் கொள்ளின் இருபது மடங்கும், நடுவண் நிலைமையை அலகாகக் கொள்ளின் பதின் மடங்கும், இன்று பொருள்விலை யேறியுள்ளது.

பொருள் விலையேற்றம் என்பது உண்மையிற் பணமதிப் பிறக்கமேயன்றி வேறன்று. இன்று பத்து மடங்கு விலையேறி யுள்ள தெனின், பத்து மடங்கு சம்பளமும் உயர்ந்துள்ளது. இவ் வுயர்த்தத்தை வணிகரும் தொழிலாளரும் கூலிக்காரரும் உடனே பெற்று விடுகின்றனர்; அரசியல் அலுவலரும் ஆசிரியன்மாரும் பல்லாண்டு இடர்ப்பட்டபின் கிளர்ச்சி செய்து பிந்திப் பெறுகின்றனர். இதுவே வேற்றுமை. செலவிற்குச் சம்பளம் பற்றாதபோது, நேர்மையில்லாதவர் கையூட்டு வாங்க நேர் கின்றது.