உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

வரலாற்று மொழிநூல் மொழிகளின் தோற்ற வளர்ச்சிகளைக் கூறுவ தால் ஏனை யீரியல்களினுஞ் சிறந்ததாம். ஒப்பியன் மொழிநூல் வரலாற்றை அறியத் துணை செ-வதால், அதற்கு அடுத்தபடியாகச் சிறந்ததாம். வண்ணனைமொழிநூல் பிறமொழித் தொடர்பு நோக்காது ஒரு மொழியை வண்ணிப்பதுமட்டும் செ-வதால், உண்மையில் இலக்கணத்தின்பாற் படுவதே. இங்ஙனம் இம் மூன்றியல்பும் முறையே தலையிடை கடையாம்.

மேலையர் மூலமொழியையும் மொழி தோன்றிய வகையையும் அறி யாமையால், அவர் வரலாற்று மொழிநூலென்று கொள்வது, இலக்கியத் துணைகொண்டு ஒரு மொழியின் அல்லது மொழிக் குடும்பத்தின் பல்வேறு நிலைகளைத் தொடர்ச்சியாகக் காலமுறைப்படி கூறுவதேயன்றி வேறன்று. இது ஒரு மொழியின் முழுச் சொற்றொகுதியை மட்டுமன்றித் தனிச்சொற் களையுந் தழுவும்.

சென்ற நூற்றாண்டிறுதிவரை உலக முதன்மொழி எதுவென்று கண்டு பிடிக்கப்படாவிடினும், என்றேனும் ஒருநாள் அது கண்டுபிடிக்கப்படும் என்னும் நம்பிக்கையோ நம்பாசையோ மேனாடுகளில் இருந்துவந்தது. இந்நூற் றாண்டிலோ அது முற்றுங் கைவிடப்பட்டுவிட்டது. அதன் விளைவே வண்ணனை மொழிநூல். இதைச் சிறப்பாக வளர்த்து வருபவர் அமெரிக்கரே. அவர் தமிழைச் செங்கொள்கைத் தமிழ்ப் புலவர் வாயிலாகக் கற்கும் வரை, இவ் வழுவியல் மொழிநூல் மேனாடுகளில் தொடரத்தான் செ-யும். ஆயினும் தமிழர் ஆரிய அடிமைத்தனத்தாற் பிறந்த தம் தாழ்வுணர்ச்சி நீங்கிப் பகுத்தறிவுக் கண்கொண்டு பார்ப்பாராயின், தமிழின் முன்மையையும் பிற மொழிகளின் வழிநிலைத் தன்மையையும் காணத் தவறார் என்பது திண்ணம்.

2. வண்ணனை மொழிநூல் வழுக்கள்

1. அடிப்படைத் தவறுகள்

(1) தமிழர் கிரேக்க நாட்டினின்று அல்லது நண்ணிலக் கடற்கரையி னின்று வந்தேறிகள் ஆவர் என்பது.

(2) நீகரோவர் ஆத்திரேலியர், முந்து நண்ணிலக் கடற்கரையர், நண் ணிலக் கடற்கரையர், அர்மீனியர், காண்டினேவியர் ஆகிய அறுவகைக் கலவையினத்தார் தமிழர் என்பது