உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

படையையும் பெரும்பாற் பொதுமக்களின் கல்லாமையையும் தகாதவகையிற் பயன்படுத்தி, இந்தியைச் செயற்கை முறையில் வளர்ப்பதிலும் பரப்புவதிலுமே கண்ணாயிருந்து, துணிச்சலுடன் பொதுமக்கள் பணத்தைக் கோடிக்கணக்காக அதற்குச் செலவிட்டு வருகின்றனர்.

இந்திய நாட்டு மொழிகளாக எண்ணப்பெற்ற பதினைந்தை யுஞ் சமமாகக் கருதாது, அவற்றுள் வடநாட்டு வழக்கு மொழியாகிய இந்திக்கும் ஒரு நாட்டிலும் வழங்காத இலக்கிய மொழியாகிய சமற்கிருதத்திற்கும் ஒருசிறிதும் தகாத தனிச்சலுகை காட்டி, வலிமைக்கு வழக்கில்லையென்னும் முறையில் ஏராளமாகப் பொது மக்கள் பணத்தைச் செலவிட்டுவரும் முறைகேட்டை, இதுவரை தமிழ்மக்கள் பொறுத்து வந்ததே அவர்கள் பெருந் தன்மைக்கும் ஒற்றுமை விருப்பிற்கும் தலையாய சான்றாம்.

மொழிகளின் உயர்வு தாழ்வை அவற்றின் தகுதிபற்றியல்லது அவற்றைப் பேசுவார் தொகைகொண்டு கணித்தல் கூடாது. பேசுவார் தொகைபற்றிப் பெருமைபெறின், சீனமொழியே உலகில் தலை சிறந்ததாகும். அதனால் அதை எல்லா நாட்டாரும் கட்டாயமாகக் கற்க வேண்டிவரும். தமிழுக்கும் இந்திக்குமுள்ள வேற்றுமை புலிக்கும் பூனைக்குமுள்ள அளவாகும். மொழியளவில் ஒரு தமிழனை ஒன்பதிந்தியார்க்குச் சமமாகக் கொள்ளினும், 27 கோடியராகும் தமிழர் 12 கோடியரான இந்தியாரினும் ஒன்றேகால் மடங்கு மேம்பட்டவராவர். இனி, ஒரு குடும்பத்து உடன்பிறந்தாரொப்ப 14 வழக்கு மொழிகளையுஞ் சமமாகக் கொள்ளினும் இந்தி மேம்பாட்டிற்கிட

மில்லை.

ஒருவர்மீது இன்னொருவர் ஏதேனுங் குற்றஞ்சாட்டின், அக் குற்றம் உண்மையிற் குற்றந்தானா என்று முதலிற் கண்டறிதல் வேண்டும். அதற்கு அதற்குரிய துறையறிவும் வேண்டும். களாப் பழமும் பலாப்பழமுங் கண்டறியாதவன் பழம் என்னும் பெயரளவில் இரண்டையும் சமமாகக் கருதலாம். அங்ஙனமே இந்தியையும் ஆங்கிலத்தையும் ஆய்ந்தறியாதவன் இரண்டையும் மொழி என்னும் பெயரளவில் ஒருநிகராகவே கொள்ளலாம்.

ஒருவர் ஒரு கட்சிக்குத் தலைவர் என்ற நிலைமையினாலேயே அவர் கூற்றை எல்லாருங் கொள்ளத்தக்க நிலைமை ஏற்பட்டு விடாது. அவர் ஒன்றைப் பலமுறை சொல்வதினாலேயே அது உண்மையும் ஆகிவிடாது. ஒரு போலிக்கூற்று மறுக்கப்படவுஞ் செய்யலாம்; மறுக்கப்படாதுமிருக்கலாம். மறுக்கப்படாமை யிலேயே ஒரு போலிக்கூற்று பொருண்மைக் கூற்றாகிவிடாது. மறுப்பென்பது மறுப்பார் விருப்பத்தையும் மறுக்கும் அமைய