உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

திடங்கொண்ட இராம பாணம்

செருக்களத் துற்ற போது

கடன்பட்டார் நெஞ்சம் போலுங்

கலங்கினான் இலங்கை வேந்தன்

என்னும் கம்பர் செய்யுளும் இதை வலியுறுத்தப் போதியன வாகும். ஆகவே, கடன்கோடல் ஒரு நிலையில் நன்மையும் ஒரு நிலையில் தீமையும் விளைக்கும் என்பது தெளிவாம்.

பொருட்கடன் கோடல் போன்றே சொற்கடன் கோடலும் தேவையும் தேவையின்மையும் ஆகிய இருவகை நிலைமைகளில் நேர்வதாகும்.

ஆங்கிலம் போன்ற மொழிகளில் சொல்வளமின்மையால், அவற்றிற்குப் பிற மொழிகளினின்று கடன்கோடல் இன்றியமை யாததாயிற்று. தமிழ் பெருவளமொழியாதலின் அதற்குச் சொற்கடன் தேவையில்லை. தமிழில் இதுவரை புகுந்த அல்லது புகுத்தப்பட்ட அயற்சொற்களெல்லாம், அதன் வளத்தைக் குறைத்து அதன் தூய்மையைக் குலைப்பதற்குக் காரணமா யிருந்தவையே.

இற்றைத் தமிழிற் கலந்துள்ள பிறமொழிச் சொற்களெல்லாம் தமிழர் தாமாக விரும்பிக் கடன் கொண்டவையல்ல. செந்தமிழ் காக்கும் நக்கீரர் மரபு அற்று ஆரியம் போற்றும் கொண்டான் மரபு ஓங்கி, சேர சோழ பாண்டியர் ஆட்சியை வேறுபல நாட்டார் கவர்ந்து, மொழியுணர்ச்சியும் வரலாற்றறிவும் தமிழரிடை முற்றும் மறைந்த காலத்து, தமிழ்ப் பகைவரால் தமிழைக் கெடுத்தற்கென்றே புகுத்தப்பட்டவையாம். இது, ஒரு பேதையின் செல்வத்தைக் கவர்தற்கு, ஒரு சூதன் அவனுக்கு வலியக் கடன் கொடுத்து வட்டி மேல் வட்டிக் கணக்கெழுதிய தொத்ததே.

சொல்லும், பொருள்போல் ஒரு செல்வமே. ஒரு செல்வன் பொருளாற் பெறும் நன்மையை, ஒரு புலவன் சொல்லாற் பெறுகின்றான். முன்னோர் ஈட்டிய செல்வத்தைப் பெருக்குவதற்குப் பின்னோரும் ஈட்டுவது போல், முன்னோர் ஆக்கிய மொழியை வளம்படுத்தற்குப் பின்னோரும் புதுச்சொற்களை ஆக்குதல் வேண்டும். இங்ஙனஞ் செய்யாது பிறமொழிச் சொற்களையே வேண்டாது கடன் கொள்பவர், தாமும் தேடாது,முன்னோர் தேட்டையும் கடனால் இழக்கும் முழுச் சோம்பேறியையே ஒப்பர்.

தமிழ் இதுவரை கொண்ட அயற்சொற்களால் தளர்ந்ததா வளர்ந்ததா என்பதைச் சில சொற்கள் வாயிலாய் ஆய்வோம்.

ஆதன், உறவி, புலம்பன் என மூன்று அருமையான தென் சொற்கள் இருப்பவும், அவை வழக்கற்று அவற்றிற்குப் பகரமாக ஆன்மா (ஆத்துமா) என்னும் வடசொல்லே வழங்கி வருகின்றது.