உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முகவுரை

xi

அண்மையிற் பொங்கியெழுந்த மாணவர் கிளர்ச்சியின் விளைவாக, தமிழ்நாட்டுச் சட்டப் பேரவையில் இந்தி நீங்கிய இருமொழித் திட்டத் தீர்மானம் நிறைவேற்றப் பெற்றுள்ளது. ஆயினும் அகப்பகையும் புறப்பகையுங் கூடி அதன் பயனைக் கெடுக்க முயல்கின்றன. அதனால். தமிழரை எளிதாய் விலைக்கு வாங்கிவிடலாமென்றும், அது தவறின் படை கொண்டு அடக்கி விடலாமென்றும், இந்தி வெறியர் கனாக் காண்கின்றனர்.

இந் நிலையில், தமிழாசிரியரும் மாணவரும் விடுமுறை நாளெல்லாம் பட்டினம் பாக்கம் பட்டிதொட்டி யெல்லாம் புகுந்து, இந்திக்கல்வியாலும் ஆட்சியாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் விளையும் தீங்குகளைக் கட்சிச் சார்பற்ற முறையில் பொதுமக்கட்கு விளக்கிக் காட்டல் வேண்டும். இது குடியரசு (Democracy) முறைப்பட்ட மக்களாட்சி (Re- public) நாடாதலால், பொதுமக்கள் முனையின் எப்படையும் எதிர்நிற்காது.

இத்தகைய தொண்டாற்றும் தனியார்க்கும் படைஞர்க்கும் பயன்படுமாறு,புன்செய்ப் புளியம்பட்டி மறைமலையடிகள் மன்றப் பாவாணர் நூல் வெளியீட்டுக்குழுவின் விருப்பத்திற் கிணங்கி இச் சுவடியை எழுதலானேன். இதன் வெளியீட்டிற்கு அக் குழுவின் சார்பாக ஆயிரத்தைந்நூறு உருபா தண்டி யளித்த ஏழு மன்றங்கட்கும் உண்மைத் தமிழர் அனைவரும் என்றுங் கடப்பாடுடையர்.

எழுத்தறிந்த தமிழருள் எளியாரும் வாங்குமாறு இது அளவான விலைக்கு விற்கப் பெறுகின்றது. இயன்றார் அனைவரும் இதை வாங்கிப் படித்து, இயலா ஏனையர்க்கும் எடுத்துச் சொல்வாராக.

இந் நூலின் கட்டடமும் உய்ப்பும்பற்றித் திருநெல்வேலித் தென்னிந்திய சை. சி. நூ. ப. க. ஆட்சித் தலைவர் திரு. வ. சுப்பையாப் பிள்ளை அவர்கள் செய்த உதவிகள் பாராட்டத் தக்கன.