உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




II. இந்தி வரலாறு

1. தோற்றமும் வளர்ச்சியும்

கண்ணன் பிறந்து வளர்ந்த வடமதுரையைத் தலைநகராகக் கொண்ட நாடு பாரதக் காலத்திற் சூரசேனம் எனப் பெயர் பெற்றிருந்தது. கண்ணன் பாட்டனான சூரசேனன் அந் நாட்ட யாண்டிருந்ததனால் அப் பெயர் பெற்றதாகத் தெரிகின்றது. சூரசேன நாட்டிலும் அதைச் சூழ்ந்தும் வழங்கிய மொழி பிற்காலத்திற் சூரசேனி எனப் பெற்றது. அதன் வழிவந்த இற்றை மொழியே மேலையிந்தி.

ஆரியர் இந்தியாவிற் புகுந்து முதன்முதற் சிந்தாற்று வெளியில் தங்கினதினால், அந் நிலப்பகுதியும் சிந்து (Sindhu) எனப் பெயர் பெற்றது. பாரசீகர் அதை ஹிந்து (Hind) என வழங்கினர். பிற்காலத்திற் கிரேக்கர் அதை இந்தோஸ் (Indos) எனத் திரித்தனர். இலத்தீனில் அது ஆற்றைக் குறித்து இந்துஸ் (Indus) என்றும், நாட்டைக் குறித்து இந்தியா என்றும் திரிந்தது.

வேதப் பிராமணர் இந் நாவலந்தேயம் முழுவதும் பரவியபின், இந்து (ஹிந்து) என்பது இத் தேயத்திற்கு மறுபெயராகி நாளடைவிற் பெரும்பான்மை வழக்காயிற்று.

வடஇந்தியாவை முதலாவது கைப்பற்றியாண்ட முகமதிய அரசர் அதை ஹிந்து (Hind) என வழங்கியதால், அந் நாட்டுப் பெரும்பான்மை மொழி ஹிந்தி யெனப்பட்டது.

அரபியரும் பாரசீகரும் துருக்கியரும் ஆபுக்கானியருமான முகமதியர் 8ஆம் நூற்றாண்டிலேயே இந்தியாவின்மேற் படை யெடுக்கத் தொடங்கிவிட்டாரேனும், 12ஆம் நூற்றாண்டுவரை சிந்து, பஞ்சாபு முதலிய வடமேற்கிந்தியப் பகுதிகளையே அவர் கைப்பற்றியாண்டனர்.

1192ஆம் ஆண்டு முகமது கோரி பிருதுவிராசனைக் கொன்று தில்லியைத் தன் தலைநகராக்கியதிலிருந்தே, முகமதிய அரசரின் இந்தி நாடாட்சி தொடங்குகின்றது.