உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்தி வரலாறு

15

இந்தி 80 நடைமொழிகளையுங் கிளைப் பிரிவுகளையுங் கொண்டது. அவற்றுட் பல, ஒன்று இன்னொன்றைப் பேசுவார்க்கு விளங்காதவளவு ஒன்றினின்றொன்று வேறுபட்டுள.1955ஆம்ஆண்டு சூன் மாதம் ஏற்படுத்தப்பட்ட பாராளுமன்றக் குழுவின் முன் கொடுக்கப்பட்ட சான்றியத்தின்படி கீழை யுத்தரப் பைதிர (பிரதேச) மக்கட்கு மேலையுத்தரப் பைதிர இந்தி விளங்கவில்லை.

இந்தி யிந்தியாவும் தமிழிந்தியாவும் என என இந்தியாவை இரண்டாகத் துண்டிக்கும் இந்தி, இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் என்பது, நெருப்புக் குளிர்விக்கும் என்பது போன்றதே.

ஆங்கிலம் அயன்மொழியெனின், இந்தியும் ஏனைமொழி பேசுவார்க்கு, சிறப்பாகத் திரவிடர்க்கு, அவருள்ளும் சிறப்பாகத் தமிழர்க்கு, அயன்மொழியே. இந்தி இந்திய மொழியெனின், ஆங்கிலமும் இன்று ஆங்கில இந்தியரின் மொழியாயிருத்தலின் இந்திய மொழியே.

ஆங்கிலம் பொதுமக்கள் மொழியாக முடியாதெனின், இந்தியும் தமிழகத்திலும் திரவிட நாடுகளிலும் வங்காளத்திலும் பொதுமக்கள் மொழியாக முடியாததே.

இந்தி இன்னும் சில்லாண்டில் ஆங்கிலம்போல் வளர்ச்சி யடைந்துவிடுமென்பது, பிறவிக் குருடனைப் பிடித்து அரசவிழி

விழிக்கச் சொல்வதொத்ததே.

“உயரவுயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?” இந்தி வெறியரைக் கொண்ட நடுவணரசு இந்திக்கு எத்துணை ஏற்றங் கொடுப்பினும் அது என்றேனும் ஆங்கிலமாகுமா? வடமொழியி னின்று வழக்கில்லாச் சொற்களையும் ஏனை மொழிகளினின்று இனிய சொற்களையும் கங்குகரையின்றிக் கடன்கொண்டாலும், இந்தி ஒருபோதும் ஆங்கிலத்திற் கிணையாகாது. பூனை உடல் முழுதும் சூடிட்டுக் கொண்டாலும் புலியாகிவிடாது.

ஆதலால், இந்தியைப்பற்றி உயர்த்திச் சொல்வதெல்லாம்

முற்றும் உண்மைக்கு மாறானதே என அறிக.