உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்தியால் விளையுங் கேடு

29

என்பது சிற்றம்பலம் என்பதன் சிதைவு. அது பேரம்பலம் என்பத னோடு ஒப்புநோக்கிய உறவியற் சொல். இவ் வீரம்பலங்களும் இன்றும் அங்குண்டு.

ஆடல், கூத்து, தாண்டவம், நடம் என்னும் நான்கும் தூய தென்சொற்களே. இவற்றுள் இறுதியிரண்டும் வடமொழியிலும் வழங்கும்.

இனி, ஓர் இந்தி மொழியார் அல்லது வையாபுரியார், நெஞ்சத்தாவு என்னுங் கருத்தைத் துணைக்கொண்டு, நெஞ்சாங் குலையைக் குறிக்கும் தில் என்னும் இந்திச் சொல்லினின்று தில்லை என்னும் பெயர் தோன்றிற்று என்று வரைந்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் பட்டமும் பெறலாம். இனி, தில் என்னும் விழைவுப்பொருளிடைச் சொல்லும் தில் என்னும் இந்திச் சொல்லினின்றே தோன்றிற்றென்றும் கூறலாம். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தைத் தம் தாய்மொழியில் இயற்றாது வேறொரு மொழியில் இயற்றினாரென்று ஓர் இடுநூல்(thesis) விடுத்து, அப் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆராய்ச்சிப் பட்டம் வாங்கியிருப்பதாகச் சொல்லப்படும்போது, இது அத்துணை வியப்பானதன்று.

னி, கண்ணன் பிறந்த வடமதுரையை நோக்கித்தான் வைகைமதுரையும், பீகாரிலுள்ள பாடலிபுத்திரத்தை நோக்கித்தான் திருப்பாதிரிப்புலியூரும் பெயர் பெற்றன என்று வரலாறும் வரையப்படும்.

7. மதிப்புக்குறைவும் பற்றுக்குறைவும் பேச்சுக்குறைவும்

இவ் வுலகிற் சான்றோர் ஆயிரத்தில் ஒருவரே உளர். கற்றோருள்ளும் கயவருண்டு. அதனாலேயே, “கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்” என்று, தாயுமானவர் கல்லாதார் பண்பாட்டை இருமுறை யடுக்கிக் கூறினார்.

ஒரு மொழிக்கு அரசியல் அரவணைப்போ பிழைக்கும் வழிவாயிற்றன்மையோ இல்லையெனின், அதைப் பெரும்பாலார் மதியார்; அதனால் அதை விரும்பிக் கல்லார் அல்லது பேசார். தமிழ் தமிழ்நாட்டு ஆட்சிமொழியாயிருப்பினும், இந்தி நடுவணாட்சி மொழியாகவும், இந்தியப் பொதுமொழியாகவும் ஏற்றம் பெறின், அதற்கே மதிப்பும் உயர்வும் உண்டாகும். “அரசன் முத்தினால் அரம்பை”.

மேலும், தமிழ்நாட்டு அலுவற்பேற்றிற்கும் இந்திக் கல்வி இன்றியமையாததென்று நாளடைவிற் சட்டம் வரும்.

சமற்கிருதம் தமிழை அடிப்படையாகக் கொண்ட கலவை யிலக்கிய நடைமொழியாயினும், அது தேவமொழியென்று