உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

தொல்காப்பியத்தையுங் கடைக்கழக நூல்களையுங் காணாமை யாலும், தமிழொடு திரவிட மொழிகளையுஞ் சேர்த்து ஓரினமாகக் குறித்துவிட்டார். மறைமலையடிகளாற் குமரித் தமிழ் புதுப்பிக்கப் பெற்றபின், தமிழ் வேறு, திரவிடம் வேறு என்பது தெள்ளிதாயிற்று. தொல்காப்பியத்தொடு ஒரு திரவிட இலக்கண நூலை, அல்லது எட்டுத்தொகையுள் ஒன்றொடு ஒரு திரவிடப் பனுவலை ஒப்பு நோக்கிக் காண்க.

பால் பிரைக்கலப்பால் தயிராகத் திரிவதுபோல், திராவிட மொழிகளும் வடசொற் கலப்பாலும் வல்லொலியாலும் அரை யாரிய வண்ணமாக மாறிவிட்டன. தயிர் மீண்டும் பாலாகாதது போல், திரவிடம் மீண்டும் தமிழாகா. வடசொல் சேரச் சேரத் திரவிடம் உயர்வாம்; அது தீரத்தீரத் தமிழ் உயர்வாம். வடசொற் சேர்க்கையாலேயே திரவிடமொழிகள் மொழிநிலை பெற்றுள்ளன. வடசொல் நீங்கிவிடின் அவை கொடுந்தமிழ் நிலைப்படும்.

தெலுங்கின் வடசொற் கலப்பினாலேயே அரசவயவர் அண்ணாமலைச் செட்டியார் தியாகராசக் கீர்த்தனைகளைத் தமிழ்நாட்டு இசையரங்கினின்று விலக்கச் சொன்னார். ஆகாசவாணி என்பதை வானொலி என்று மாற்றத் தமிழ்நாட்டிற் கிளர்ச்சி நிகழ்ந்ததேயன்றித் திரவிடநாடுகளிலன்று. வடசொற் கலவாது தமிழிற் கட்டுரையும் நூலும் வரையவியலும்; அது திரவிட மொழி களில் இயலாது. வடமொழி யெதிர்ப்புத் தமிழ்நாட்டி லுண்டு; திரவிட நாடுகளில் இல்லை. இந்தியெதிர்ப்பும் தமிழ் நாட்டிற்போல் அங்கு வலிமையாய் நிகழ்வதில்லை. ஏனெனின், இந்தியாட்சியைத் தள்ளிவைக்க வேண்டுமென்பதே திரவிடர் வேண்டுகை.

யை

நேரு உறுதிமொழி, இந்திபேசா நாடுகள் இந்தியாட்சி விரும்பும்வரை ஆங்கிலம் தொடரலாமென்றும், அதற்குள் இந்தியை மேன்மேலுங் கற்றுத் தேர்ச்சி பெறவேண்டுமென்றும், கூறுகின்றதே யொழிய, இந்தியை நீக்கவேண்டுமென்றும், ஆங்கிலத்தை நிலைப் படுத்த வேண்டுமென்றும் கூறவில்லை. நேரு உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டுமென்று தி.மு.க. கூறுவது போன்றே தமிழ் நாட்டுப் பேராயமுங் கூறுகின்றது. இரண்டிற்கும் வேறுபாடு மிகச் சிறிதே.

இந்தி வெறியர் இந்தியை உடனே அரசியல் மொழியாக்க வேண்டும் என்கின்றனர்; தமிழ்நாட்டுப் பேராயம் சற்றுப் பிந்தியாக்க வேண்டுமென்கின்றது; தி. மு. க. மிகப் பிந்தியாக்க வேண்டுமென்றது. இது, ஒருவனுக்குச் சாவு, இன்றே வரட்டும் என்று ஒருசாராரும், நாளை வரட்டும் என்று ஒரு சாராரும், நாளை நின்று வரட்டும் என்று ஒரு சாராரும் கூறுவதொத்ததே.