உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




68

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

லாளரும் பிறமொழிப்படத் தொழிலாளராகப் பயின்று கொள்ளல் வேண்டும். அதை விரும்பாதவர், வெளிநாடுகளினின்று தாய்நாடு திருப்பப்பட்ட இந்தியர் போன்றே வேறேதேனும் விரும்பிய தொழிலை மேற்கொள்ளவேண்டும். அது அறமாகா தெனின், தங்கக் கட்டுப்பாட்டினால் வேலையிழந்தவர்க்கு மட்டும் என்ன அறஞ் செய்யப்பட்டுள்ளது? இனி இந்தியாவில் உருவாக்கப் பெறும் இந்திப் படங்களுட் பெரும்பாலன தமிழ்நாட்டி லேயே பிடிக்கப் படுவதனால், இந்திப் படம் விலக்கப்பெறின் தமிழ்நாடு ஒரு பெருவருவாயை இழக்குமென்று கூறுவது, இந்தியெதிர்ப்பாளரான தமிழர்க்கே சார்பான ஏதுப்போலியாகும்.

இந்தியாவின் தென்கோடியிலுள்ளதும், இந்திநாட்டிற்குப் பிற நாடுகளினும் சேய்மைப்பட்டதும், இந்திக்குப் பிறமொழிகளினும் அயலான மொழி பேசப் பெறுவதும், இந்தியெதிர்ப்பில் தலையாயது மான தமிழ்நாட்டில், இந்திப் படங்களுட் பெரும்பாலன உருவா கின்றனவெனின், அது இந்தியால் தமிழர்க்கு அண்மையில் நேரவிருக்கும் பெருந்தீங்கையே எடுத்துக்காட்டி எச்சரிக்கின்றது. இந்திச் சார்பான ஐந்தாம் படையினர் தமிழ்நாட்டிற் பெருகியத னாலேயே, இந்தி வெறியர் படைவிடுத்துத் தமிழ்நாட்டை அடக்கக் கருதுகின்றனர் போலும்! பத்தாண்டுகட்குமுன் இந் நிலை யிருந்ததில்லை.

இளைதாக முண்மரங் கொல்க களையுநர் கைகொல்லுங் காழ்த்த விடத்து.

(குறள். 879) என்னும் தமிழகத் தலைமையறிஞர் எச்சரிக்கையைப் புறக்கணித்த தனாலேயே, தமிழ்நாட்டில் இந்தி யெதிர்ப்பில்லை யென்றும், தி.மு.க. தலைவர் மக்கள் உட்படப் பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர் இந்தியை விரும்பிப் பயில்கின்றனரென்றும், இந்திப்புலவர் தேர்வு எழுதுவார் தொகை ஆண்டிற்காண்டு உயர்ந்து வருகின்றதென்றும், இந்தி வெறியர் பல்லாண்டிற்கு முன்பே பாராளுமன்றிற் கூறி மகிழ்வாராயினர்.

மதுவிலக்கு உண்மையில் இன்றுள்ள முறையில் நல்லதன்றே னும், மதுவூணால் வரும் வருவாய் மாண்புடைய தன்றென்று விலக்கப்பட்டுள்ளது. மதுவூணினும் கேடுவிளைக்கும் இந்தி பரப்பலைத் தடுப்பதனால் நேரும் வருவாய்க் குறைவு, தமிழ் நாட்டிற்கு இழப்பென்று எவ்வகையிலும் கருதப்படா தென்பது ஒருதலை.

இனி, தமிழ்ப் படங்களினும் இந்திப் படங்களே இன்ப மூட்டுவனவெனின், தமிழ்ப்படங்களின் குற்றங்குறைகளை நீக்கித் திருத்த வேண்டுமென்பதல்லது, தமிழ்ப் படங்களைப் புறக்கணித்து