உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பல்வேறு செய்திகள்

71

கருதப்படுகின்றது. அதனால் அத்தகைய தாக்குதலை இயன்ற வழியெல்லாம் தடுக்க வேண்டியதாகின்றது. அதுவே இங்குச் செய்யப்பட்டு வருகின்றது. ஆனால், சிவசேனையோ, தமிழ்ப் படங்கட்கும் மாறாகவன்றித் தென்னிந்தியரால் உருவாக்கப்பெறும் இந்திப் படங்கட்கு மாறாகவே கிளர்ச்சி செய்து வருகின்றது. ஆகவே, அதன் தாக்குதல் தமிழ் மேலதன்று, தேசத்தின் ஒரு பகுதியில் வாழும் மக்களின் மேலதே."

சென்னை, மார்ச்சு 2.

ஊர்காவலர்க்கு ஓர் உணர்த்துரை

சி. (C) இலக்குமிநாராயண்

அடிமைத்தனக்காலம் என்று சொல்லப்படும் ஆங்கிலர் ஆட்சிக் காலத்தில், சென்னை மாநகரில் ஊர்காவல் உதவிக் கருமத்தலைவராய் (Asst. Commissioner of Police) இருந்த திரு. பவானந்தம் பிள்ளை சிறந்த தமிழறிஞரும் தொல்காப்பியவுரை, யாப்பருங்கல விரிவுரை (விருத்தி) முதலிய உயரிய இலக்கண நூல் வெளியீட்டாளரு மாயிருந்தார்; கோவை மாவட்டத்தில் ஊர்காவல் வட்டார உண்ணோட்டகராய் (Circle Inspector of Police) இருந்த திரு. துடிசைகிழார் அ. சிதம்பரனார் சிறந்த தமிழ்ப் புலவரும் பல்துறை ஆராய்ச்சி யாளருமாக இருந்தார்; தஞ்சை மாவட்டத்தில் ஊர்காவல் கீழ் உண்ணோட்டகராய் (Sub-Inspector of Police) இருந்த திரு. சோமசுந்தரம் பிள்ளை தலைசிறந்த நுண்மாண் நுழைபுலத் தமிழிலக்கணப் புலவராயிருந்தார். இம் மூவரும் தலைசிறந்த தமிழன்பரும் தமிழ்த் தொண்டருமா யிருந்தது மிகமிகப் பாராட்டத்தக்கதாம்.

விடுதலைக் காலமென்று பெருமையாக விளம்பப் பெறுவ தும், ஆட்சிமொழியுங் கல்விமொழியும் தமிழாக மாறியுள்ளதும், மாணவர் இந்தியை நீக்கித் தமிழைக் காப்பதுமான, இக்காலத்தில், எனக்குத் தெரிந்தவரை, ஊர்காவல் துறையில் ஒருவரேனும் தமிழ்ப் புலமை யில்லாதிருப்பது, எத்துணை வருந்தத்தக்கது!

சட்டத்தையும் ஒழுங்கையும் போற்றிக் காப்பதுடன் தமிழறிவும் ஓரளவு பெற்றிருப்பது, தமிழ்நாட்டு ஊர்காவல் தலைவர்க்குத் தக்கதாம். அல்லாக்கால், சில சிக்கலான நிலைமை களில், சட்டமீறற் குற்றிறத்திற்கும் தமிழ்க்காப்புத் தொண்டிற்கும் வேறுபாடறியாது இடர்ப்படவோ அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தவோ நேரலாம்.

தேசிய மாணவர்க்குத் தெரிப்புரை

ஒவ்வொரு நாட்டிலும் மொழியே மக்கள் முன்னேறும் வழியாம். கூட்டுறவிற்கு வேண்டும் கருத்தறிவிப்பும் நல்வாழ்விற்கு