உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? மேன்மேலுங் கல்வி கரையின்றியும் கற்பவர் நாட்குன்றியும் வருவதால், பயனற்ற மொழிக்கல்வியை அறவே விட்டுவிட்டுப் பயன்மிக்க அறிவியற் கல்விக்கே, பொன்னினும் மணியினும் பன்மடங்கு சிறந்த தம் தேடருஞ் சில் காலத்தைச் செலவிடுவாராக. மேற்கல்வியும் வெளிநாட்டுச் செலவும் அயல்நாட்டு அலுவற்பேறும் ஆங்கிலத்தாலன்றி இந்தியால் இயலாதென்பதையும் உணர்வாராக. தமிழ்நாடு தனிப்பட்டது

உலக மொழிகள் மூவாயிரத்துள் (2796), தொன்மை, முன்மை; எண்மை(ஒலியெளிமை), ஒண்மை; இளமை, வளமை; தாய்மை, தூய்மை; செம்மை, மும்மை; இனிமை, தனிமை; பெருமை, திருமை; இயன்மை, வியன்மை ஆகிய பதினாறு சிறப்புகளை ஒருங்கே யுடையது தமிழ் ஒன்றே. ஆதலால், இந்தியாவில் மட்டுமன்றி உலக முழுமையிலும் தமிழ்நாடு தனிப்பட்டதாகும்.

ஆயிரக்கணக்கான முதலிரு கழகத் தனித்தமிழ் நூல்கள் அனைத்தும் ஆரியரால் அழிக்கப்பட்டுவிட்டமையாலும், இந்தியா அளவு தெற்கிற் பரவியிருந்த தமிழன் பிறந்தகமாகிய பழம்பாண்டி நாடு கடலுள் முழுகிப் போனமையாலும், கடந்த மூவாயிரமாண்டு தமிழர் ஆரிய அடிமைத்தனத்துள் இருந்து வருவதனாலும், பழந்தமிழின் திரவிடத் தாய்மையும் உலக முதல் உயர்தனிச் செம்மொழிமையும் தமிழர் கண்ணிற்கும் தெரியாது மறைந்துள்ளன.

மொழிகளின் உயர்வு தாழ்வு அவற்றின் இலக்கண விலக்கிய சொல்வளத் தன்மைகளைப் பொறுத்ததேயன்றி, அவற்றைப் பேசுவோர் தொகையைப் பொறுத்ததன்று.

குறைந்த பக்கம், பன்மொழிக் கலவையும் அரைச் செயற்கை யாக அமைந்த இலக்கிய நடைமொழியும் தவறாக ஆரியத்திற்கு மூலமெனக் கருதப்படுவதும் ஆகிய, சமற்கிருதத்திற்கு அளிக்கப் படும் உயர்வேனும், அதற்கு அடிமூலமாகிய தமிழுக்கு அளிக்கப் பெறல் வேண்டும்.

தமிழ்நாட்டுப் பேராயக் கட்சித் தலைவர், தமிழின் சிறப்பை அறியாமையாலும் தமிழ்ப் பற்றின்மையாலும் கூறும் கூற்றுகள் கொள்ளத்தக்கனவல்ல.

இந்தியால் தமிழ்நாட்டிற்கு நேரக்கூடிய தீங்குகள் மாணவர் கடுஞ்சுமை, மீளா அடிமைத்தனம், சேய்மைத் தமிழழிவு என மூன்றாம். இவற்றுள் இறுதியது ஈடிலாப் பேரிழப்பாதலால், இந்தியை எவ்வகையிலும் அறவே விலக்கல் இன்றியமையாததாம்.

தமிழ்நாடு தனிப்பட்டதாதலின், அதைப் பிற நாடுகளோ டொப்பக்கொண்டு ஓரியல் மொழித்திட்டம் புகுத்தாது தனிச்சிறப்பாக வேறியல் மொழித்திட்டமே வகுத்தல் வேண்டும்.