உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

தமிழர் திருமணம் வந்திருக்கலாம். எப்படியிருப்பினும் பிறப்பியற் கணிப்பாற் பொதுமக்களுக்கு ஒரு நன்மையுமில்லை யென்பதே முடிபாம்.

ஒருவர் ஒரு காரியம் ஆகுமா ஆகாதா என்று கேட்டால் கணியர்கள் பொதுவாய் வேகடையாகவும் இரட்டுறலாகவும் வலக்கார (தந்திர) மாகவுமே கூறுவர். சில சமையங்களில் அவர் கூறியது வாய்ப்பின், அது குருட்டடியே யாகும். தாம் கூறப்போகிற செய்தியைப்பற்றி முன்னமே பிறரிடம் மறைவாகக் கேட்டறிந்து கொள்வதும் அவர் வழக்கம். சிலர் சில இளந்த மனக்காரரை, அவருக்கு இத்தனை நாளிற் சாவென்று அச்சுறுத்தி, அதைத் தீர்த்தற்கென்று ஏமாற்றிப் பணம் பறிப்பதுமுண்டு.

நாட்பார்ப்பது போன்றே வேளைபார்ப்பதும் தீயதாகும். சில ஆண்டு களுக்கு முன், சென்னையில் ஓர் இளைஞனுக்கு ஒரு பெரியார் ஓர் ஆங்கிலக் கும்பனியில் வேலைக்கு மதித்துரை (சிபார்சு) செய்திருந்தார். கும்பனித் தலைவர் அவ் விளைஞனை அடுத்த திங்கட்கிழமை காலை 8 மணிக்கு வந்து தம்மைப் பார்க்கச் சொல்லியிருந்தார். அவ் விளைஞன் வேளை பார்ப்பவனாதலால், காலை 7.30-லிருந்து 9 மணிவரை இராகுகாலமென்று அவ் வேளை கழித்து 9.30 மணிக்குச் சென்றான். உடனே கும்பனித்தலைவர் அவனுக்கு ஒழுங்கீனமான பயலென்று பட்டந் தந்து, கண்டபடி திட்டி வெளியே போகச் சொல்லி விட்டார்.

ஆகையால் ஒரு காரியஞ் செய்வதற்குக் காலம்பற்றிக் கவனிக்கக் கூடியவை யெல்லாம், தட்பவெப்பநிலை (சீதோஷ்ண ஸ்திதி)யும் செல்வ வறுமை நிலையும் தூக்க ஊக்க வேளையும் ஒளியிருட் காலமுமே யன்றி வேறன்று.

இனி, பொருட்குறிகளைக் கவனிப்போம். ஒருவன் தன் வீட்டை விட்டுப் புறப்படும்போது, வாசல் நிலை தலையில் தட்டிவிட்டால், உடனே தடையென்று நின்றுவிடுகிறான். இதற்குக் காரணமென்ன வென்றால், வாசல் குட்டையா யிருப்பதே. குட்டையான வாசலில் குனிந்து போனால் தட்டாது. சில சமையங் களில் குனிந்துபோக மறந்துவிடுவதால் தட்டிவிடுகிறது. இது மனிதனால் நேரும் குற்றமேயன்றி வாசலால் வந்த குற்றமன்று. தானே வாசலை முட்டிவிட்டு வாசல் தட்டிவிட்டது என்று கூறுகிறவன் முட்டாள். முட்டுகிற ஆள் முட்டாள்தானே! வாசலை நெடிதாக்க வேண்டும், அல்லது குனிந்து போக வேண்டும். நெடிய வாசலானால் நிமிர்ந்து போகலாம். மேனாட்டார், நெடிய வாசல்கள் அமைப்பதால் முட்டாள்களாவதில்லை. வாசல் தட்டுவது தீக்குறியானால், நெடிய வாசலுள்ள வர்க் கெல்லாம் அக்குறி தோன்றுவதில்லையே! இதனால், முட்டாள் குட்டை வாசலை வைத்து முட்டாளாகிறான் என்று வெட்ட வெளியாகவில்லையா?

இங்ஙனமே பிற குறிகளும், பூனை, வாணியன், மொட்டைப் பார்ப்பாத்தி முதலியவர்கள் எல்லா விடங்களிலு மில்லையே! அவர்கள் இல்லாவிடங்களில் அவர்களால் நேரும் தீக்குறிகள் எங்ஙனம் தோன்றும்? ஆகையால் இவை யெல்லாம் மனப்பான்மையால் தோன்றுவனவே யன்றித் தாமாகத் தோன்றுவன

வல்ல.