உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் எப்படிக் கெட்டான்?

99

மருத்துவத்தினாலேயே அம்பட்டர்க்குப் பண்டிதன், பரிகாரி என்ற பட்டங்கள் உண்டாயின.பரிகாரி என்பது இன்று பரியாரி என மருவி வழங்குகின்றது. இன்றும் பலவிடங்களில் அம்பட்டர் மருத்துவரா யிருக்கின்றனர். ஆயினும், குலத்தாழ்வுபற்றி அவரை ஊக்காமையால் தமிழ அறுப்பு மருத்துவம் அடியோடொழிந்தது.

தாழ்த்தப்பட்டோர்க்குத் தம் தெய்வத்தைக் கோயிலில் வணங்கும் உரிமையும் இல்லாது போயிற்று.

முற்காலத்தில், தமிழ்நாட்டில் வேளாளனே தலைவனாகவும், பிறரெல்லாம் அவனுக்குத் துணைவராகவும் கருதப்பட்டனர். பிற்காலத்தில் பார்ப்பனன் தலைவனாகவும் பிறரெல்லாம் அவனுக்குத் தொண்டராகவும் கருதப்படலாயினர். பார்ப்பனர் தம்மைக் குலமுறையில் தலைமையாகச் செய்துகொண்டதால், எந்த வேலையிலும் தொழிலிலும் அவருக்கு முதலிடங் கிடைப்பதுடன், அவர் தாழ்ந்த வேலையைச் செய்தாலும் உயர்வை இழவாதிருக்கின்றனர். ஒரு பார்ப்பனர் தண்ணீர்க்காரனா யிருந்தால் அவரைச் சாமி சாமி என்கின்றனர்; வேறொரு குலத்தான் அவ் வேலையைச் செய்தால், அவனுக்கு மதிப்பில்லை. தோட்டி வேலை செய்தாலுங் கூடப் பார்ப்பனர் சாமி சாமி யென்றே அழைக்கப் படுவர் போலும்!

சிலர், தாழ்த்தப்பட்டோர் துப்புரவு (சுத்தம்) இல்லாமலும் ஒழுக்கக் கேடாயுமிருப்பதால் அவரொடு எங்ஙனம் பழகமுடியும் என்கின்றனர். தாழ்த்தப் பட்டோர் பிறரால் தள்ளப்படுவதனாலேயே அங்ஙனமிருக்கின்றனர். வெள்ளைக்காரரின் சமையற்காரர் தாழ்த்தப்பட்டோரா யிருந்தும் துப்புரவாயும் ஒழுக்கமாயும் இருப்பதால், பார்ப்பனரும் அவர் சமைத்ததை உண்கின்றனர். ஒழுக்கக்கேடு பிற குலத்தார்க்கு முள்ளது.

தாழ்த்தப்பட்டோர்க்குக் கல்விமட்டும் அளிப்பின் மிகத் திருந்திவிடுவர். "பறையைப் பள்ளிக்கு வைத்தாலும் பேச்சில் ஐயே என்னும்" என்றொரு பழமொழி வழங்குகின்றது. குறைந்தது ஆயிரம் ஆண்டுகளாகத் தாழ்த்தப் பட்டுக் கிடப்பவரை ஓரிரு ஆண்டுகளில் முற்றிலும் திருத்திவிட முடியாது. சில தலைமுறைகளாகத் தொடர்ந்து நாகரிகம்பெறின், பின்பு தாழ்த்தப்பட்டோர்க்கும் பிறர்க்கும் எதிலும் வேறுபாடில்லாமற் போம் என்பது திண்ணம்.

பார்ப்பனர் சமுதாயத்தில் தலைமை பெற்றதனால், தமிழர் அவரைப் பேச்சிலும் பழக்கத்திலும் பின்பற்றித் தமிழைக் கெடுத்துக்கொண்டதோடு, சில கலைகளுக்கும் இடமில்லாது செய்துவிட்டனர். உதாரணமாக, மட்கலக்கலை, பார்ப்பனரைப் போல உலோகப்பாண்டங்களைப் பழங்குவதே உயர்வென்றும், மட்பாண்டங்களைப் பழங்குவது இழிவென்றும் கருதப்பட்டதால், மட்கலக்கலை வளர்வதற் கிடமில்லாது போயிற்று.

குலப்பிரிவால்

குரங்கானாலும் குலத்திலே கொள்ளவேண்டு மென்று, ஒரு குலத்திற்குள்ளேயே அல்லது குடும்பத்திற்குள்ளேயே மணஞ்செய்து காள்வதால், மதிநுட்பம், உடலுரம், நெடுவாழ்வு முதலிய குணங்களில்லாத பிள்ளைகள் பிறந்து நாடு சீர்கேடடைகின்றது.