உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் எப்படிக் கெட்டான்?

101

கொட்டப்படும் அழிந்துபோயின. அதனாற் பல கலைகள் மறைந்தன. ஆயிரக்கணக்கான புலவரும் செய்யுள் செய்யவல்ல குடிமக்களும் தொழிலாளரும் நிறைந்திருந்த தமிழ்நாடு, இன்று நூற்றுக்குத் தொண்னூறு பேரைத் தற்குறிகளாகக் கொண்டுள்ளது.

வடநாட்டிலிருந்து பார்ப்பனர் கூட்டங் கூட்டமாக வந்து தமிழ்நாட்டிற் குடியேறினர், குடியேற்றவும் பட்டனர். அவர் வரவரத் தமிழர்க்கு அலுவற்பேறு குறைந்துகொண்டே வந்தது. வடமொழிக் கல்வியை வளர்க்கவும் பார்ப்பன ரையே முன்னேற்றவும் பல வழிதுறைகள் வகுக்கப்பட்டன.

தமிழர்க்குத் தாய்மொழி யுணர்ச்சியும் தாய்நாட்டுச் சரித்திர அறிவும் இல்லாது போயின. தமிழில் எத்தனை வடசொற்கள் கலக்கின்றனவோ அத்துணைச் சிறப்பு என்று எண்ணப்பட்டது. அதனால்தான் ஆங்கிலம் வந்தபின் ஆங்கிலச் சொற்களையும் கலந்து பேசுகின்றனர். தமிழர் தென்னாட்டிற்கே யுரியவராய், ஆரியர் வருமுன்பே சிறந்த நாகரிகமடைந்தவரா யிருப்பவும், வடநாட்டிலிருந்து வந்தவரென்றும் ஆரியரால் துரத்தப்பட்டவரென்றும் அவராலேயே நாகரிக மடைந்தவரென்றும் தவறாய்க் கருதப்பட்டனர்.

தமிழுக்கும் தமிழர்க்கும் மாறான பல ஆரியக் கதைகள் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்டன. மதியை விளைக்காதனவும், அடிமைத்தனத்தில் ஆழ்த்து வனவும், கலையிலக்கியங்களில் பொய்யும் புனைந்துரையுமானவுமான பல தீமைகள் தமிழர்க்குப் புகட்டப்பட்டன.

இன்றும் ஆங்கிலேயரினின்று விடுதலை யாவதினும் ஆரியரினின்று விடுதலையடைவதே தமிழர்க்கு அரிதாகின்றது.

7. அரசியற்கட்சிகள்

1. நீதிக்கட்சி: ஆரியர்க்கும் தமிழர்க்கும் மொழிப்போர் தொன்று தொட்டு நடந்துவருகின்றதேனும், அது பொதுமக்களுக்குத் தெரிவதன்று.

ஆரியரால் திராவிடர்க்கு நேர்ந்துள்ள சமுதாயத் தீங்குகளை, முக்கியமாய் அலுவற் குறைவை, நீக்குவதற்கு, நீதிக்கட்சி தோன்றினது. ஆனால், அக் கட்சியில் சில குறைபாடுகள் இருந்தன. அதனால், தமிழர்க்கு ஒரேயொரு துறையில்தான் நலம் பிறந்தது. அதுவும் நீடிக்கவில்லை.

நீதிக்கட்சித் தலைவர்கள் தெலுங்கரும், மலையாளியரும் தமிழறியாத வருமாக இருந்ததினால், தமிழ் வளர்ச்சிக்கோ தமிழ்ப் புலவர் முன்னேற்றத் திற்கோ ஒன்றும் செய்யவில்லை. அவருட் பலர் கிழார் (ஜமீன்தார்)களாக இருந்தமையால் குடியரசுக்கு ஏற்காதவர்களாயும் பொதுமக்களோடு தொடர்பில்லாதவர்களாயு மிருந்தார்கள். விடுதலைக்கட்சியே வெல்லும் என்பதையும், ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் ஒரு காலத்தில் நீங்குமென் பதையும் அறியாமல், ஆங்கிலேயருடன் அளவிறந்து ஒத்துழைத்துப் பழியையும் கட்டிக்கொண்டார்கள். கடைசியில் தங்கள் கட்சி வேலையும் செய்யாமல், தேர்தலில் தோல்வியுற்றபின் இடம் தெரியாமல் ஓடி ஒளிந்துகொண்டார்கள். இது அவர்கள் செய்த தவறுகளில் மிகப் பெரிது.