உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்னிணைப்பு

61

திரும்புகின்றனர். மேளதாளமும் யானைகளும் ஊர்வலத்தில் வழக்கமாக வைக்கப்படுகின்றன. மஞ்சள்நீர் தெளிக்கப்படுகின்றது. வீடுவந்து சேரும்போது, எல்லாக் கதவுகளும் சாத்தப்பட்டிருக்கின்றன. மணவாளன் அவற்றை வலிந்து தள்ளித் திறந்து, வீட்டிற்குள் புகுந்து வடக்குச் சிறகில் அமர்கின்றான். பெண்ணின் அத்தையும் தோழிமாரும் மணமக்களை அணுகி அவர்கட்குத் தித்திப்புப் பண்டங்களைத் தருகின்றனர். பெண் மணவாளனுக்குச் சோறு படைக்கின்றாள். இருவரும் ஓரிலையில் உண்டபின் பந்தலுக்குச் செல்கின்றனர். அங்கே ஒரு துணி இரண்டாகக் கிழிக்கப்பட்டு, ஒரு பாதி மணவாளனுக்கும் ஒரு பாதி பெண்ணிற்குமாக, இனங்கர் முன்பும் நண்பர் முன்பும் வேறு வேறு கொடுக்கப்படுகின்றது. துணிகிழிப்பு, தீர்வை (Divorce) செய்துவிட்டதாகக் குறிப்பது போலக் கருதப்படுகின்றது” என்பது.

இச் சான்றியத்திற் கூறப்பட்டுள்ள பருப்பொருட் செய்திகள் மலையாள நாட்டிற்கெல்லாம் பொதுவேனும், நுண்பொருட் செய்திகள் அவ்வவ் இடத்திற்கும் அவரவர் செல்வ நிலைக்கும் ஏற்ப வேறுபட்டவையாகும். மணவாளன் ஒத்த குலத்தானாகவும் இளைஞனாகவுமே யிருக்கவேண்டு மென்பதில்லை; மூத்தவனாகவும் பிராமணனாகவு மிருக்கலாம். ஒருவனே ஒரே சமையத்திலோ வெவ்வேறு சமையத்திலோ பல பெண்களுக்குத் தாலி கட்டலாம். பெண் நாலாம் நாள் தாலியைக் கழற்றிவிடலாம். பெண்ணிற்கு மணவாளனொடு பொதுவாய்த் தொடர்பில்லாதுபோயினும், அவன் இறந்தபின் தீட்டுக் கழிப்பது வழக்கம். சிலவிடத்து மணவாளனே கணவனாவது முண்டு. அந் நிலைமை தாலிகட்டன்றே முடிவு செய்யப்பட்டிருக்கும். சிக்கனத்திற்காகப் பத்தாண்டு அல்லது பன்னீராண்டிற் கொருமுறை, பல தாலிகட்டுகளைத் தொகுதியாக நடத்துவது வழக்கம். அதுவும் இயலாத எளிய தாய்மார், தெய்வச் சிலையையோ வாளையோ மணவாளனாகக் கொண்டு, தாமே தம் மகளிர்க்குத் தாலி கட்டுவதுண்டு. பதினோராண்டு நிரம்பு முன் தாலி கட்டப்பட்டுவிடும். சிலர் ஓராட்டைப் பெண்ணிற்குக் கட்டுவது முண்டு. பொதுவாக, தாலிகட்டு திருமணத்தோடு தொடர்பற்ற தனிச்சடங்காகவே செய்யப்படும்:

இங்ஙனம் இது பொருத்தமற்ற சடங்காயினும், கோவிலகம் என்னும் அரண்மனைகளிலும் பெரிய நாயர் இல்லங்களிலும், ஆயிரம் பிராமணரை உண்பிப்பதும் பத்தாயிரம் பதினாயிரம் உருபா பண்டை நாள்களிலேயே செலவழிப்பதும் உண்டு.

சம்பந்தம்

மகளிர் பூப்படைந்தபின் செய்யப்படும் உண்மையான திருமணமாகிய சம்பந்தம், வியப்பிற்கும் அறிவேட்கைக்கும் உரியதாகாமையின், விரிவாக *சோழபாண்டி நாடுகளில், கார்காத்தார் குலத்தில், ஒரு பெண்ணின் பேதை அல்லது பெதும்பைப் பருவத்தில் ஒருநாள் அவள் அம்மான் குதைச்சுமணி என்னும் ஒரு பொற்பிறையை அவள் கழுத்தில் கட்டுவதுண்டென்றும். அது விளக்குத்திருநாள் எனப்படும் என்றும், அம் மணி அன்றே கழற்றப்படுமென்றும், அண்ணாமலை பல்கலைத் தமிழ் ஆராய்ச்சித் துறையைச் சார்ந்த புலவர் (S.) தண்டபாணி தேசிகர் கூறுவர்.