உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1. கழக(சங்க)த்திற்கு முற்காலம்

(1) குமரிநாடு (Lemuria): தமிழர் அல்லது திரவிடர், ஆரியர் துருக்கியர் முதலிய பிறமக்களைப்போல் அயல்நாடுகளிலிருந்து நாவல் (இந்து) தேசத்திற்கு வரவில்லை. தெற்கே இந்துமாக்கடலில் முழுகிப்போன குமரிக்கண்டமே தமிழரின் பிறப்பிடம். மனிதன் தோன்றிய இடமும் அதுவேயென்று மேனாட்டுக் கலைவல்லார் கூறுவது மொழிநூற்கு முற்றும் பொருத்தமாயிருக்கின்றது.

குமரிநாடு மிகமிகப் பழைமையானது. அதுதான் பழைய உலகம். பழைய உலகத்தில் வடவரைக் கோளத்தினும் தென்னரைக் கோளத்தில் நிலம் மிகுதியாயிருந்தது. பிற்காலத்தில் மனிதனாக வளர்ச்சியடைந்த இலெமுர் (Lemur) என்னுங் குரங்கினம் வாழ்ந்த இடம் குமரிநாடென்று கண்டு எக்கேல், கிளேற்றார் முதலிய கலைஞர் அதை இலெமுரியா என்று அழைக்கின்றனர். குமரி என்றொரு பெரிய மலைத்தொடர் அங்கிருந்ததால், தமிழர் அதைக் குமரிக்கண்டம் அல்லது குமரிநாடு என்று அழைக்கின்றனர். கி.மு. இருநூறாயிரம் ஆண்டுக்காலத்திற்கும் ஐம்பதினாயிரம் ஆண்டுக் காலத்திற்கும் இடையில், இந்தியா, தென்கண்டம் (ஆத்திரேலியா), ஆப்பிரிக்கா என்னும் மூன்று கண்டங்களையும் ஒன்றா யிணைத்துக்கொண்டு இந்துமாக்கடலிடத்திலிருந்த ஒரு பெருநிலப்பரப்பே குமரிக்கண்டம் என்று மேனாட்டறிஞர் கூறுகின்றனர்.

உலகத்தில் எல்லா வுயிர்களும் ஒரேகாலத்தில் தோன்றவில்லை. முதலாவது புற்செடி போன்ற ஓரறிவுள்ள நிலைத்திணை (தாவர) உயிரி (பிராணி) களும், பின்பு முறையே, நீர்வாழ்வனவும் ஊர்வனவும் விலங்கு பறவைகளும் மாந்தருமாகிய இயங்குதிணை (சங்கம) உயிரிகளும் தோன்றின. இவ் வுயிரினங்களெல்லாம் நெட்டிடையிட்டுக் குமரிக்கண்டத்திலேயே தோன்றினவென்று மேனாட்டார் கூறுகின்றனர். மாந்தரும் மாக்கள் (அநாகரிகர்) மக்கள் (நாகரிகர்) என இருநிலை அடைந்தனர்.

குமரிமுனைக்குத் தெற்கே, கி.மு. 3000 ஆண்டுக்காலத்திலிருந்து சிறிது சிறிதாய்க் குறுகிவந்து, கடைசியில் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் சிறிதுமின்றி மறைந்துபோன, பாண்டிநாட்டுப் பகுதியும் குமரிக்கண்டத்தைச் சேர்ந்ததே.

(2) ஐந்திணை நிலை: தமிழர் முதலாவது, குறிஞ்சி முல்லை பாலை மருதம் நெய்தல் என்ற இயற்கையான ஐந்துநிலப்பிரிவுகளில், பெரும்பாலும்

  • Northern Hemisphere. Southern Hemisphere

7